சுப்ரமணியபுரம் படத்தில், மதுர குலுங்க குலுங்க என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பாடகர் வேல்முருகன். அடுத்து, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா அழகான பொண்ணை பார்த்த தேடுங்கடா போன்ற பாடல்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பாடகர் வேல்முருகன்.
விஜய் டிவியில் கடந்த 2022ல், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் பாடகர் வேல்முருகன் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் அடிக்கடி கிராமிய மணம் கலந்த பாடல்களை பாடி வீட்டில் இருந்தவர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு, பாடகர் வேல்முருகன் திருச்சிக்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எப் போலீசார் வேல்முருகனை சோதனை நடத்தினர். அவரது ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது வேல்முருகன் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக இதுகுறித்த சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை போலீசார், வேல்முருகன் பயணிக்க இருக்க தனியார் விமானம் சேவை மையத்துக்கு இந்த தகவலை தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் வேல்முருகன் தங்களது விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.
நான் ஒரு பிரபலமான பாடகர், குடிபோதையில் பயணிக்க கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்று அவர் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்து பிரச்னையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்ததால் பதட்டம் நிலவியது.
தொடர்ந்து பாடகர் வேல்முருகன் அங்கிருந்த போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். போதை தெளிந்த நிலையில், வேறு ஒரு விமானம் மூலம் அவர் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விமான நிலையத்தில் பாடகர் வேல்முருகன் தகராறு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





