அமரன் திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. சொல்லப்போனால் அவரது திரையுலக வாழ்வில், இரண்டாவது திருப்புமுனையான பயணம் அமரன் என்றே கூறலாம். அதற்கு முன்பு அவர் ஆக்சன் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், முழுமையான ஆக்சன் ஹீரோ அந்தஸ்து என்ற ஒன்று கிடைக்காமல் இருந்து வந்தது.
இப்படியான சூழலில் அதை அனைத்தையுமே மாற்றி இருக்கிறது அமரன் திரைப்படம். ஒரு ராணுவ வீரனாக, கச்சிதமான உடலமைப்புடன், மிடுக்காக வந்து, கம்பீரமாக வசனங்களை பேசி கைத்தட்டல்களை பெற்றார் சிவகார்த்திகேயன். நம்ம வீட்டு பிள்ளை என்ற அந்தஸ்திலேயே வந்த அவருக்கு, ஆக்சன் ஹீரோ என்ற பட்டம் அதன் மூலம் கிடைத்தது.
இப்படியான சூழலில் தற்போது தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அமரன் திரைப்படத்தை தொடர்ந்து இதுவும் ஆக்சன் ஜானரில் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படம் கஜினி போன்ற கதை அம்சத்திலும், துப்பாக்கிப் போன்று விறுவிறுப்பாகவும் இருக்கும் என அதன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியிருந்தார். மதராசியை தொடர்ந்து அவர் அடுத்ததாக, பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கராதான் இதன் இயக்குனர். அதர்வா, ஸ்ரீ லீலா என ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.
இதில் வில்லனாக ரவி மோகன் நடித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. சென்னையைத் தாண்டி, சிதம்பரம், காரைக்குடி, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், சில நாட்களாக அதன் பணிகள் நிறுத்தப்பட்டன. தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொள்ளாச்சியில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம், ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்த திரைப்படங்களிலேயே எந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறிய சிவகார்த்திகேயன், எனக்கு இரண்டாம் பாகம் என்றாலே பயம்தான். அது மிகவும் நல்ல ஒரு ஸ்கிரிப்டாக இருக்க வேண்டும். ஏற்கனவே அதன் முதல் பாகத்தின் வெற்றியை பாழாக்காமல் அது இருக்க வேண்டும். என்னிடம் கேட்டால், மாவீரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று கூறுவேன். ஏனென்றால் அது மிகவும் தனித்துவமான எழுத்து என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.





