நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா. அந்த படம் தந்த அபார வெற்றியால் சிறுத்தை சிவா என்றே அழைக்கப்படுகிறார். தொடர்ந்து அஜீத்குமார் நடித்த வீரம் விவேகம் வேதாளம் விஸ்வாசம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.
தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தையும் சிறுத்தை சிவா டைரக்ட் செய்தார். இந்த படங்கள் அனைத்துமே பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் 14ம் தேதி கங்குவா படம் திரைக்கு வந்தது.
கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றார் படத்தின் கதாநாயகன் சூர்யா. கங்குவா படம் 2000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்றார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள், காதில் ரத்தம் வராத குறையாக படம் முழுவதும் எல்லா கேரக்டர்களுமே கத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு படமா, என்று கடுமையாக விமர்சித்தனர்.
கங்குவா என்பதற்கு பதிலாக கத்துவா என டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் திட்டினர். இந்த படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இந்தியன் 2 படத்தை விட கங்குவா படம்தான் 2024ம் ஆண்டின் மிக மோசமான படம் என்றும் சினிமா விமர்சககர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர். அந்தளவுக்கு கங்குவா படம் சூர்யாவுக்கும் சிறுத்தை சிவாவுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது.
கங்குவா படம் தோல்விக்கு பிறகு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பளிக்காத நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இருந்து வருகிறார். இந்த சூழலில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாகவும், பிரபலமான ஒரு கோவிலில் சிறுத்தை சிவா, விஜய் சேதுபதி சந்தித்து அவர்கள் இணையும் அடுத்த படம் குறித்து பேசியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி வைரலானது.
இதுகுறித்து தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு வீடியோவில் கூறுகையில், பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி இப்போது நடித்து வருகிறார். அப்போது அங்கிருந்த பிரபல கோவிலுக்கு சென்ற போது விஜய் சேதுபதியும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் சந்தித்து பேசியுள்ளனர். அதை தான் இப்படி தவறாக கூறி விட்டனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அப்படி ஒரு பேச்சுவார்த்தையே அவர்களுக்குள் நடக்கவில்லை. இந்த விஷயத்தை நடிகர் விஜய் சேதுபதியே என்னிடம் கூறினார், என்று சித்ரா லட்சுமணன் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.





