தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பராசக்தி அவரது 25வது படமாகும். இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கி வருகிறார். பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் அதர்வா ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் ரவிமோகன் நடிக்கிறார். மொழிப்போர் தியாகி இராசேந்திரன் வாழ்க்கை கதையில் இந்த படம் உருவாகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் இதுபோல் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் கதையில் உருவானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23வது படம் மதராஸி. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. கடைசியாக இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் 15 நாட்கள் இரவுகளில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
மதராஸி படத்தில் ருக்மணி வசந்த் விக்ராந்த் பிஜூ மேனன் டான்சிங் ரோஸ் சபீர் வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மதராஸி படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி மதராஸி படம் வெளியாக உள்ளது.
அதே நேரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா என்ற படமும் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை பாக்கியஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி, துல்கர் சல்மான் நடித்த காந்தா என 2 படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் இந்த படங்களுக்கு இடையே போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படமும், துல்கர் சல்மான் மீனாட்சி சவுத்ரி நடித்த லக்கி பாஸ்கர் படமும் ஒரே நாளில், தீபாவளிக்கு வெளியானது. ஆனால் 2 படங்களுமே பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. அதேபோல் இந்த முறையும் இந்த 2 படங்களும் ஒரே தேதியில் வெளியாகி பெரிய அளவில் பிளாக் பஸ்டர் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.





