“தாலாட்டு”, “கண்ணான கண்ணே” போன்ற பல பிரபலமான சீரீயல்களில் நடித்தவர் சஹானா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது விஜய் ஆண்டனி படத்தில் தனக்கு நடந்த துன்புறுத்தல் குறித்து ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி, அக்சா போன்ற பலருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சலீம்”. இத்திரைப்படத்தில் சஹானா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அப்பேட்டியில் பேசிய சஹானா, “சலீம் படத்திற்காக ஒரு முக்கியமான ரோல் என்று கூறி என்னை அழைத்தார்கள். அந்த கதாபாத்திரம்தான் கதையையே நகர்த்தி கொண்டுபோகும் என கூறினார்கள். அப்படிப்பட்ட முக்கிய கதாபாத்திரம் என்று கூறியதால் நான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அந்த படத்தில் நான் நடித்தேன் என்பதே பலருக்கும் தெரியாது. அந்த படத்தில் எனக்கு பல காட்சிகள் இருப்பதாக கூறினார்கள். என் முகத்தில் ஆசீட் வீசுவது போன்ற காட்சி இருந்தது. அதற்காக நான் பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தேன். இன்னொரு காட்சியில் சாக்கடையில் இருந்து என்னை தூக்குவது போல் படமாக்கப்பட்டது. அந்த காட்சிக்காக ஒரு சிமென்ட் மாதிரியான கலவையை என் மீது ஊற்றினார்கள்.

அந்த கலவையால் எனது மூக்கு, காது எல்லாம் அடைத்துக்கொண்டது. நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை மனிஷாயாகவே மதிக்கவில்லை” என்று மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், “விஜய் ஆண்டனியிடம் சென்று ‘என்னை வைத்து நிறைய காட்சிகள் எடுப்பதாக என்னிடம் கூறினார்கள். ஆனால் எதையுமே எடுக்கவில்லை’ என்று கூறினேன். அதன் பின் விஜய் ஆண்டனி இயக்குனரிடம் எடுத்து கூறியபிறகு என்னை வைத்து சில காட்சிகள் எடுத்தார்கள். ஆனால் படம் வெளிவரும்போது அந்த காட்சிகளை எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





