தீபாவளியன்று வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள்.
முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் 42 கோடியே 30 லட்சம் ரூபாயை வசூல் செய்தது. இது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ஒட்டு மொத்த வசூல் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அமரன் திரைப்படத்திற்கு பலரும் படையெடுக்க அதன் வசூல் நூறு கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்து இருக்கிறார். அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை விட ஒரு படி மேலே பாராட்டப்படுவது சாய் பல்லவி தான். இந்து ரபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் மிக யதார்த்தமாக அவர் நடித்திருக்கிறார் என்று பலரும் கூறியுள்ளனர். இப்படியான சூழலில் அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், பலரும் இந்த திரைப்படம் மணிரத்னம் சார்பாக போல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதனைக் கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் சாய்பல்லவிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி இந்த திரைப்படத்தில் நன்றாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். கடைசி பத்து நிமிடத்தை தக்க வைக்க சாய்பல்லவி போன்று அற்புதமான நடிகை தான் எங்களுக்கு தேவைப்பட்டது.
சாய் பல்லவிக்கு தமிழில் முதல்முறையாக பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறது. இதற்காக அவர் நிறைய விருதுகளை பெறுவார். இந்த திரைப்படம் 150 கோடியை தாண்டி விட்டதாக பலரும் கூறுகிறார்கள். என்னுடைய படம் மற்ற திரைப்படங்களின் வசூலை தாண்டி விட்டது என்பது எனக்கு தேவை இல்லை. இந்த மாதிரி வெற்றி படங்களை கொடுக்கும் போது, அடுத்த பெரிய பட்ஜெட் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று பேசி இருக்கிறார்.





