நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். அதர்வா ஸ்ரீலீலா குரு சோமசுந்தரம் பசில் ஜோசப் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இலங்கையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சென்னையில் 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பராசக்தி படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், ஏற்கனவே நடித்து சில காட்சிகள் மட்டும் விடுபட்டுப் போன மதராஸி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் வில்லனாக வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
பராசக்தி மற்றும் மதராஸி படங்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில் இப்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு, குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி ஆகிய 3 பேரில் ஒருவருடன்தான் அடுத்த படம் என்ற தகவல் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
ஆனால் இப்போது வெளியான லேட்டஸ்ட் தகவலின்படி பராசக்தி மதராஸி படங்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில்தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்தான் கதாநாயகி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய வகையில், கமலுடன் லோகேஷ் கனகராஜ் அதிக நெருக்கத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். அவருடன் ஒரு இசை ஆல்பத்திலும் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.
மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திலும் ஸ்ருதிஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் முக்கிய கேரக்டர் தந்திருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்தான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் 3 என்ற படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த போது தனுஷின் நண்பராக அதே படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது உண்மையா என்பது இன்னும் உறுதியாக அறிவிக்கபடவில்லை.





