தமிழ் சினிமாவில் தனது அபாரமான உழைப்பாலும் திறமையாலும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறது. உலக அளவில் 310 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வசூலை கடந்து இந்த படம் சாதனை புரிந்திருக்கிறது.
தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனால் படப்பிடிப்பு 70 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். மேலும் பிஜூ மேனன் டான்சிங் ரோஸ் சபீர் விக்ராந்த் வித்யூத் ஜம்வால் என முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன், அடுத்து தனது 24வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். டாண் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதே போல் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்க உள்ளார்.
இந்த படத்தின் கதை ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க கமிட்டாகி பிறகு விலகிய படம், இந்த படத்துக்கு ஏற்கனவே புறநானூறு என்ற டைட்டில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட உள்ளது. எஸ் கே நடிக்கும் இந்த 25வது படத்தில் வில்லன் கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் எஸ்கே 25 படத்தில் கதாநாயகியாக தெலுங்கு பட முன்னணி நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார். இவர் புஷ்பா 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் முரளி மகன் அதர்வா ரீ என்ட்ரி தருகிறார். முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அமரன் படத்தை தொடர்ந்து எஸ்கே 25 படத்துக்கும் ஜீவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 24 வது படம், சுதா கொங்கரா இயக்கும் 25வது படம் என 2 படங்களின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது. இந்த 2 படப்பிடிப்புகளிலும் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று மாறி மாறி நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த படங்கள் அடுத்த ஆண்டில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது எஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.





