நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ரியாலிடி ஷோவில் ஆங்கராக ஆரம்பத்தில் இருந்தவர். பிறகு சினிமா விருது விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்தார். அந்த வகையில் நடிகர் பாண்டிராஜ் அவரை மெரினா என்ற படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தார்.
கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். மெரினா படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து மனம் கொத்திப் பறவை எதிர்நீச்சல் மான் கராத்தே ரெமோ காக்கிச்சட்டை என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் சீமராஜா டாக்டர் மாவீரன் அயலான் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகராக மாற்றியது.
கடைசியாக கடந்தாண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் 325 கோடி ரூபாய்க்கு வசூலை குவித்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 45 கோடியில் இருந்து 70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் மெரினா படத்தில் நடித்த போது ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் இப்போது 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
இந்நிலையில் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா
இசையமைக்கிறார்.
இதையடுத்து குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. இந்த படம் அப்பா, மகன் பாசப்போராட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கிறார். ஆனால் இப்போதைக்கு கால்ஷீட் தர வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான் கால்ஷீட் தர முடியும் என்று மலையாள நடிகர் மோகன்லால் கூறிவிட்டார்.
இந்நிலையில், விநாயக் சந்திரசேகர் படத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மேலும் புஷ்கர் காயத்ரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க அவர் கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த 3 படங்களுக்குள் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 100 கோடியை கடந்து விடும். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சம்பள லிஸ்ட்டில் அவரும் வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.





