தமிழ் சினிமாவில் கவனிக்கப்படக்கூடிய முக்கிய இடத்தில் முன்னணி நடிகையாக சாய்பல்லவி இருந்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள அமரன் படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்துள்ளனர். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நாளை அமரன் படம் தீபாவளி பண்டிகை திரைப்படமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மேஜர் முகுந்த என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் முதன்முறையாக ராணுவ வீரராக நடித்துள்ள படம் அமரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் சிவகார்த்திகேயனின் மனைவியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் தொடர்ந்து சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி கூறுகையில், அமரன் படத்தில் இந்து கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான் தயங்கினேன்.
என் தயக்கத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் சொன்னேன். அவர் நீங்கள் முதலில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்துவை சந்தித்து பேசிவிட்டு வந்துவிடுங்கள். பிறகு ஸ்கிரிப்ட் மீண்டும் படியுங்கள் என்று கூறினார். மறைந்த மேஜர் முகுந்த் மனைவி இந்துவை பார்த்ததும் அவருடன் பேசி பழகியதும் இம்ப்ரஸ் ஆகிவிட்டது. அதன் பிறகு நான் அமரன் படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று ராஜ்குமார் பெரியசாமியிடம் கூறினேன் என்று சாய் பல்லவி கூறியிருக்கிறார்.
ஆனால் அப்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் சாய்பல்லவி ஒரு சத்தியமும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சாய்பல்லவி கூறுகையில், வாழ்க்கை வரலாறு படம் என்றால் அதுவும் கதாநாயகனை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றால், படம் ஒருவேளை அதிக நீளமாக இருக்கும் பட்சத்தில், கடைசியில் படத்தின் நீளத்தை குறைக்க கதாநாயகி வரும் காட்சிகளை தான் வெட்டி தூக்கி போட்டு விடுவார்கள்.
அமரன் படத்தில் அதுபோல் படம் நீளமாக இருக்கிறது என, என் கதாபாத்திரத்தை அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுங்கள் என்று சாய்பல்லவி டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேட்டு இருக்கிறார். உங்கள் கதாபாத்திரமான இந்து ரெபகா வர்கீஸ், மேஜர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரம் போன்றே முக்கியமானது என ராஜ்குமார் பெரியசாமி உறுதிமொழி அளித்திருக்கிறார். அதன் பிறகு அமரன் படத்தில் சந்தோஷமாக முழு மனதுடன் சாய்பல்லவி நடித்திருக்கிறார்.





