தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வருகிற ஜனவரி இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க நடிகர் விஜய் முடிவு செய்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ள நடிகர் விஜய், தனது 69 படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தமிழக அரசியலில் முழு தீவிரம் காட்ட முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
விஜயின் அரசியல் வருகை குறித்து பலவிதமான கலவையான விமர்சனங்கள் வெளிவந்தாலும், அதற்கெல்லாம் பதிலடி தருகிற விதமாக அரசியல் மாநாட்டில் 48 நிமிடங்கள் பேசியிருக்கிறார் விஜய். அதில் குறிப்பாக என்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்பதையும் பகிரங்கமாகவே அறிவித்து விட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆளுங்கட்சி திமுக, அரசியல் மாநாட்டில் திரண்ட கூட்டத்தை பார்த்து அரண்டு போயிருக்கிறது. 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவித்திருந்த நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மாநாட்டுக்கு வந்துவிட்டார்கள். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வரப்படும் கூட்டங்களுக்கு மத்தியில் விஜய்க்கு தானாக திரண்ட பெருங்கூட்டத்தை பார்த்து திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
அதனால் விஜய் பேச்சுக்கு எந்த எதிர் கருத்தும் தெரிவிக்காமல் திமுகவினர் அமைதி காத்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும், விஜய்க்கு எதிரான விமர்சனங்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அப்படிப்பட்ட சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி சரியான பதிலடி தந்தார் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தில் முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவரே அதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் விஜய் ஒரு சிறந்த பண்பாளர் என்றும் அவர் பாராட்டியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்திலும், தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





