நடிகர் அஜீத்குமார் வசந்த் இயக்கிய ஆசை, அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை படங்களை விட பலமடங்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது எஸ்ஜே சூர்யா இயக்கிய வாலி படம்தான். இதில் காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் ஒரு அஜீத்குமாரும், சிம்ரனை காதலித்து திருமணம் செய்யும் அவரது தம்பியாக மற்றொரு அஜீத்குமாரும் நடித்திருப்பர்.
இந்த படத்தில்தான் முதன்முறையாக வில்லனாக அஜீத்குமார் நடித்திருப்பார். அதுவும் தம்பி மனைவி சிம்ரன் மீது ஆசைப்படும் ஒரு கேரக்டராக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் தம்பியையே கொலை செய்யும் அளவுக்கு அஜீத்குமார் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அந்தளவுக்கு அஜீத்குமார் நடிப்பை மெருகேற்றி இயக்கி இருந்தார் அன்றைய இயக்குனர் எஸ்ஜே சூர்யா.
அதே போல் நடிகர் விஜய்க்கும், ஜோதிகாவுக்கும் தமிழ் சினிமாவில் பெரிய அடையாளத்தை கொடுத்த படம்தான் குஷி. அதுவும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் டீன் ஏஜ் வயதினர் கொண்டாடிய ஒரு படமாக குஷி படம் அமைந்தது. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ வை மையப்படுத்தி எஸ்ஜே சூர்யா இயக்கிய இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மெர்சல் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் எஸ்ஜே சூர்யா. அதே போல் நடிகர் அஜீத்குமாருக்கும் வில்லனாக நடிக்க வேண்டும் என்று பல நேர்காணல்களில் எஸ்ஜே சூர்யா சொல்லிக்கொண்டு இருந்தார். அஜீத்குமாரை வைத்து இரட்டை ரோல்களில் அவரை நடிக்க வைத்து இயக்கி விட்டேன். வில்லனாக அவருடன் நடிக்கவே மிகவும் விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் இப்போது நடிகர் அஜீத்குமாரை எஸ்ஜே சூர்யா நேரில் சந்தித்து இருக்கிறார். அவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் எஸ்ஜே சூர்யா பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு எனது மெண்டார் அஜீத்குமாரை நேரில் சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது ஐதராபாத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்தில் அஜீத்குமார் நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக யார் நடிக்கிறார்கள் என்று இன்னும் உறுதியாகவில்லை. அதனால் எஸ்ஜே சூர்யா, அஜீத்குமார் சந்திப்பு நடந்திருப்பதால், குட்பேட் அக்லி படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா தான் நடிக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.





