நவீன யுகத்தில் சமூக வலைதளங்களின் பயன்படுத்தி அதன் மூலம் பலரும் புகழின் உச்சிக்கு செல்கிறார்கள். சிறிய சிறிய வீடியோ எடுத்து அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்து, விரைவில் செலிபிரேட்டி ஆவதையும் இங்கு பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் சோபா சிறுவன். மயிலாப்பூரில் தனது தந்தை நடத்தி வரும் சோபா கடைக்கு, இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்வதன் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் அந்தச் சிறுவன்.
சிறுவனின் விளம்பர யுக்தியும், அவர் அதனை கையாளும் விதமும் வீடியோ வடிவில் காண்போரை பெரிதும் கவர்ந்திருப்பதால், அவரை ஏராளமானோர் சமூக வலைதளத்தில் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் தனக்கென அதிக ஃபாலோவர்களை வைத்திருக்கும் சோபா சிறுவன், தற்போது சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயரத்தை தொட்டிருக்கிறார்.
சோபா சிறுவனின் அசத்தல் வீடியோவால் கவனம் பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன், அவரை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க வாய்ப்பு வழங்கியுள்ளார். எல் ஐ சி அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்னும் பெயரில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் ஏற்கனவே, அஜித்தை வைத்து திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார்.
ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த திரைப்படத்திலிருந்து விலகினார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் தனது அடுத்த படத்தை, லவ் டுடே பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து பணியாற்ற அவர் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
இதனை லியோ திரைப்படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிக்கிறார். படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவும் வருகிறார். அனிருத் படத்தில் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் தலைப்புக்கு எதிராக எல்ஐசி நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்கும் சூழலில், படத்தின் சூட்டிங் கோவை மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது. முதலில் ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து திருமூர்த்தி அணை பகுதிகளில் தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சோபா சிறுவனும் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில், சோபா சிறுவன் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோருடன் இணைந்து வீடியோ வெளியிட்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





