ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாகவும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வர்ணனையாளராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. நான் ஸ்டாப்பாக அவரது சரவெடி பேச்சால் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி காமெடி ரோலிலும் நடித்தார்.
தேவி, கவலை வேண்டாம், ரன் பேபி ரன், புகழ், நானும் ரௌடிதான், இவன் தந்திரன், காற்று வெளியிடை, வடகறி, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். பிறகு எல்கேஜி படம் மூலம் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களால் பெரிய வெற்றி அடைந்தார்.
அதன்பிறகு சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜிக்கு, அந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. எனினும் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜி, தி கோட் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 69வது படத்தை இயக்க முயற்சித்தார். அதற்காக நடிகர் விஜயை சந்தித்து கதையும் சொன்னார்.
ஆர்ஜே பாலாஜி சொன்ன கதை நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்த போதிலும், இந்த கதையில் நான் நடித்தால் சரியாக வராது, அதனால் வேறு நடிகரை வைத்து எடுங்கள் என்று கூறிவிட்டார். அதன்பிறகு இப்போது சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். கோவையில் கடந்த ஒரு வாரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது. விஜய்க்கு சொன்ன கதையில்தால் இப்போது சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நண்பரும், அவரது உதவி இயக்குனருமான சித்தார்த் விஸ்வநாதன், சொர்க்கவாசல் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் கடந்த 29ம் தேதி வெளியானது. கதாநாயகனாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், நட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சென்னையில் கிளைச்சிறை ஒன்றில் கைதிகளுக்கும், ஜெயில் வார்டன்களுக்கும் இடையே கடந்த 1996ம் ஆண்டில் நடந்த வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வெளிவந்துள்ளது. படம் ரிலீஸாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ரூ. 4கோடி 60 லட்சம் வரை வசூலித்துள்ளது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துவருவதால் ரசிகர்களின் வரவேற்பு நன்றாக உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





