அண்மையில் அஜித்தின் 63வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி அவரது அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி பிலிம்ஸ் எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஜூன் மாதம் சூட்டிங் தொடங்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகிறது. இதற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி அஜித்தின் அடுத்த பட அப்டேட்டால் ரசிகர்கள் குஷி அடைந்தாலும், எதற்கு இன்னும் விடா முயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மட்டும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
அத்துடன் சரி இப்போது வரைக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அப்போது கூட சூட்டிங் பற்றி தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இதன் பிறகு, படப்பிடிப்பு தளத்தில் திரிஷா அர்ஜுன் ஆரவ் மற்றும் ரெஜினா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதை வைத்தே படத்தில் இவர்கள் நடிப்பதை ரசிகர்கள் உறுதி செய்து கொண்டனர். மற்றபடி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படும் நிலையில் அது பற்றியும் உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு இல்லை.
விடாமுயற்சியின் இயக்குனர் மகிழ்திருமேனி நடிகர் அஜித் என்பது மட்டுமே லைக்கா நிறுவனத்திடம் இருந்து வந்த ஒரே பதிலாக இருக்கிறது. இப்படியான சூழலில் தான், விடாமுயற்சி படம் வேறு ஒரு நிறுவனத்திற்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்னும் எதுவும் பேசப்படவில்லை. வரும் நாட்களில் விடா முயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





