இன்றைய தொழில்நுட்ப காலத்தில், பெரும்பாலானோர் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கும் சூழலில், தொலைக்காட்சியை பார்ப்பதற்கு என்றும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், டிஆர்பி ரேட்டிங்ற்காகவும், பலர் தனியார் சேனல்கள் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன.
இதில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைகின்றன. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் நடுவராக தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் இருந்தார்கள்.
இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை இங்கு பலராலும் மறக்க முடியாது. அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக அதில் பங்கேற்றனர். அந்த சீசன், மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
குறிப்பாக கோமாளிகளாக வந்த புகழ், பாலா, சரத், மதுரை முத்து என அனைவரும் கலக்கினர். வாரம் வாரம் சிரிப்பு விருந்து வைத்தது குக் வித் கோமாளி. மிகப்பெரிய அளவில் அந்த சீசன் கொண்டாடப்பட, அதற்கு அடுத்தடுத்த சீசன்களும் வர ஆரம்பித்தன. இதில் நடுவர்களாக வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் சிறப்பாகவே செயல்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் தொடங்கி இருக்கிறது. ஆனால் இதில் நடுவர் வெங்கடேஷ் பட் இல்லை. அதற்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். வெங்கடேஷ் பட் எதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று அப்போதே கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.
அதன்படி மற்றொரு தனியார் சேனலில், வெங்கடேஷ் பட் தலைமையில் டாப் குக்கு டூப்பு குக்கு என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பழைய சீசனில் வந்த கோமாளிகளே இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில், வெங்கடேஷ் பட்டுடன் இன்னொரு நடுவரும் வரை இருக்கிறார். இதில் யாரெல்லாம் சமைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. வைகைப்புயல் வடிவேலுவும் இதில் போட்டியாளராக பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவு உண்மை என்பது நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே தெரிய வரும்.





