தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆர் சிவாஜியில் துவங்கி, ரஜினி, கமலை அடுத்து இப்போதைய விஜய், தனுஷ் வரை மூன்று தலைமுறைகளுக்கு பாடிய மிகச்சிறந்த பாடகர். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். பல விருதுகளை வென்றவர்.
எஸ்பி பாலசுப்ரமணியம், பாடகராக மட்டுமின்றி பல படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார். சில படங்களில் நடிக்கவும் செய்தார். பாடகராக, நடிகராக, மிமிக்ரி கலைஞராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் சில படங்களுக்கு பணி செய்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்று காரணமாக உடல் நலம் பாதித்து உயிரிழந்தார்.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனின் தங்கை தான் எஸ்பி சைலஜா. பல பாடல்கள் பாடியிருக்கிறார். எஸ்பிபி மகன் சரண் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார். படங்களிலும் நடித்து இருக்கிறார். சில ஆண்டுகளாக வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். எஸ்பிபி இருந்த போது, அப்பாவுடன் சேர்ந்து பல மேடை கச்சேரிகளில் எஸ்பிபி சரண் பாடவும் செய்திருக்கிறார்.
எஸ்பிபியை பொருத்தவரை சாகாவரம் பெற்ற ஒரு புகழ்மிக்க கலைஞர். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை பெற, புகழை பெற முக்கிய காரணம், அவர்கள் படங்களில் இடம்பெற்ற பாடல்கள்தான் காரணம். அந்த பாடல்களை எல்லாம் பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம்தான். அவரது குரலில் ஒலித்த பாடல்கள்தான் ரஜினி, கமலுக்கு நிறைய பெருமையை தேடித்தந்தது.
இப்போதை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இறந்த பாடகர்களின் குரல்களை பயன்படுத்தி இசைக்கூடத்தில், புதிய பாடல்களை உருவாக்க முடியும். அப்படி இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இறந்துப்போன 2 பாடகர்களின் குரலை பயன்படுத்தி, லால் சலாம் படத்தில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார். ஆனால் இதற்கு இறந்த பாடகர்களின் குடும்படுத்தினரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். அந்த குடும்பத்தினருக்கு ஏதேனும் சன்மானம் தரவேண்டும். அதை ஏஆர் ரகுமான் சரியாக செய்திருக்கிறார்.
ஆனால் தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் என்பவர், எஸ்பி பாலசுப்ரமணியம் குரலை, ஏஐ தொழில் நுட்பத்தில் கிடா கோலா என்ற பாடலில் பயன்படுத்தியதாக அவரே ஒரு நேர்காணலில் ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் இதற்காக எஸ்பிபி குடும்பத்தினரிடம் அவர் அனுமதி பெறவில்லை. இதனால் இசையமைப்பாளர் விவேக் சாகருக்கு, எஸ்பிபி சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முறையாக எங்களிடம் அனுமதி பெறாமல் என் தந்தை எஸ்பிபி குரலை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு தருவதோடு, ராயல்டியில் பங்கும் தர வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.





