தமிழ் சினிமாவை பொருத்த வரை தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி என பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. அதனால் சினிமா வளர்ச்சி பாதையில் செல்வதாக பலரும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் தமிழ் சினிமா மிக வேகமாக அழிவுப்பாதையை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் படங்கள் மட்டுமே தயாரிக்கப்படும் நிலையில், அதை தயாரிப்பது பெரும்பாலும் தெலுங்கு படத் தயாரிப்பாளர்களும், கார்பரேட் நிறுவனங்களும்தான். தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை. பல வெற்றிப் படங்களை தந்த தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மூடுவிழா கண்டு பல ஆண்டுகளாகிறது.
அதே போல் தமிழில் சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிப்பு என்பது காணாமல் போய்விட்டது. மிக மிக சொற்பமான படங்களே சின்ன பட்ஜெட்டில் உருவாகின்றன. அப்படி உருவானாலும் அந்த படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. பான் இந்தியா படங்களில் நடிக்க ஸ்டார் நடிகர்களே பிற மொழிகளில் இருந்து வரவழைக்கப்படுவதால் இங்கு லோக்கல் துணை நடிகர்களுக்கு நடிக்க வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடந்த படப்பிடிப்புகளில் இப்போது 30 சதவீதம் மட்டுமே படப்பிடிப்புகள் நடக்கின்றன. மாதத்தில் 10 நாட்கள் படப்பிடிப்பில் வேலை செய்தாலே பெரிய விஷயம் என்ற நிலையில், சினிமா தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருமானம் இழப்பு என்ற நிலையில் வாழ்வாதார பிரச்னையில் போராடி வருகின்றனர்.
ஆனால் முன்னணி நடிகர்கள் மட்டும் ஒரு படத்தில் நடிக்க 50 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி, செல்வச் சீமான்களாக பவனி வருகின்றனர். ராஜபோக வாழ்க்கை நடத்துகின்றனர். தமிழ் சினிமாவில் நிலவும் கடுமையான வறுமை நிலையை கண்டுகொள்ளாமல் தங்களது வளத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் செயல்படுகின்றனர்.
இதே நிலை நீடித்தால், தமிழ் சினிமாவே அழிந்துவிடும் என்ற சூழலில்தான் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல், தமிழ் சினிமாவில் எந்த படப்பிடிப்பும் இல்லை, முற்றிலும் ரத்து, ஸ்டிரைக் என்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படக்குழுவினர் மட்டும், தங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து, மேலும் 3 மாதங்கள் கூடுதலாக ஷூட்டிங் நடத்திக்கொள்ள கனிவுடன் அனுமதிக்குமாறு, தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி மற்றும் சர்தார் 2 படக்குழுவினர் இப்படி சுயநலமாக இருப்பது, கோரிக்கை வைப்பது தவறான முன்னுதாரணம் என பலரும் திட்டி வருகின்றனர்.





