தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அவர் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது மனைவி மற்றும் மனைவி வீட்டார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.
குறிப்பாக மனைவி ஆர்த்தி தன்னை மிகவும் அடிமைத்தனமாக நடத்தியதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய வங்கி கணக்கு கூட ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகூட என்னுடைய லாக் இன்னில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். வீட்டில் வேலைக்காரர்கள் முன்னிலையில் பலமுறை நான் அவமானப்படுத்தப்பட்டேன். நான்செய்கிற ஒவ்வொரு செலவுக்கும், ஆர்த்தியிடம் கணக்கு காட்ட வேண்டும்.
ஆனால் ஆர்த்தி லட்சக்கணக்கில் செலவு செய்வார். அவருக்கு தனியாக நான்கு ஐந்து வங்கிக் கணக்குகள் இருந்தன. ஆனால் என்னுடைய வங்கி கணக்கு மட்டும் அவருடன் ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தது என்றும் கூறியிருந்தார். நான் பலமுறை பல விதங்களில் என் மனைவியால் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்றும் ஜெயம் ரவி கூறியிருந்தார். இப்போது மனைவியை பிரிந்து மும்பையில் நடிகர் ஜெயம் ரவி செட்டிலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியாலோ அல்லது பலவீனத்தாலோ அல்ல. உண்மையை மறைத்து என்னை தவறாக சித்தரித்துக் காட்ட சிலர் செய்யும் முயற்சிகளுக்கு கண்ணியமாக பதில் அளிக்காமல் இருந்தேன். நீதித்துறை உண்மையை வெளிக்கொண்டு வரும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நான் முந்தைய அறிக்கையில் சொன்ன விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. விவாகரத்து பற்றிய பேச்சுவார்த்தை இருந்தது என்று எனக்கு தெரியாது என்று கூறவில்லை. அந்த விவாகரத்து அறிவிப்பு இருவரது ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது என சொல்வதுதான் பொய். அதுபற்றி எனக்குத் தெரியாது என்றுதான் கூறினேன். இதுபற்றி தனியாக பேச நான் தற்போதும் தயாராக இருக்கிறேன். தற்போது வரை அது மறுக்கப்பட்டு வருகிறது.
எனக்கு திருமணம் மீது அதிகம் மரியாதை இருக்கிறது. யாருடைய புகழையும் கெடுக்கும் வகையில் பொதுவெளியில் நான் பேசமாட்டேன். குடும்பத்தின் நலன் மீதுதான் என்னுடைய ஒரே கவனம் இருக்கிறது. என்னை கடவுள் அருள் வழிநடத்தும் என நம்புகிறேன், என்று ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.





