நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ம் தேதி புஷ்பா 2 வெளியானது. புஷ்பா முதல் பாகத்தை விட புஷ்பா 2 படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. முதல் நாளில் 275 கோடி ரூபாய், 7வது நாளில் 1006 கோடி ரூபாய், தற்போது 1831 கோடி ரூபாய் என வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதற்கிடையே நடிகர் அல்லு அர்ஜூன், பிரிமியர் ஷோ பார்க்க ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு சென்ற போது ரசிகர்களின் பலத்த கூட்டம் அங்கு திரண்டது. இதில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ள ஏற்பட்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் பலத்த காயமடைந்தார்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது, ஜாமீனில் விடுதலை, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் குறித்து தெரிவித்த அதிரடியாக விமர்சனங்கள், சிறப்பு காட்சிகளுக்கு அரசு விதித்த தடை போன்ற பரபரப்பான சம்பவங்கள் நடந்தாலும், புஷ்பா 2 படம் வசூலில் எகிறி அடித்து விளையாடி வருகிறது.
புஷ்பா 2 படத்தை பொருத்த வரை நடிகர் அல்லு அர்ஜூன் மாஸ் காட்டி காட்சிக்கு காட்சி நடிப்பில் அசத்தியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் சுனில் ரமேஷ் ராவ் என முக்கிய கேரக்டர்களின் நடிப்பும், பாடல்களும் ரிபீட் ஆடியன்ஸ் வருகைக்கு அதிக காரணமாகி விட்டது. ஸ்ரீ லீலா போட்ட குத்தாட்டமும் பெரிய அளவில் டிரண்டிங் ஆகியுள்ளது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம், 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஏற்கனவே நீக்கப்பட்ட 20 நிமிட காட்சிகளை, படத்தில் சேர்க்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 11ம் தேதி முதல் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் புஷ்பா 2 படத்தின் நீளம் மாறிவிடும்.
வரும் 11ம் தேதி முதல் தியேட்டர்களில் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் புஷ்பா 2 படம் ஓடும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 1831 கோடி ரூபாய் வசூலித்த பிறகு ஏன் இந்த வேலை என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். அதே நேரத்தில் இந்த அளவுக்கு அபார வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு வெட்டப்பட்ட காட்சிகளையும் சேர்த்து புஷ்பா 2 படத்தை முழுமையாக காட்ட வேண்டும் என்று படக்குழு ஆர்வமாக உள்ளதால் இந்த நடவடிக்கை என்றும் தெரிய வந்துள்ளது.





