கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தனது படங்களில் தோல்வியை சந்தித்து வருகிறார் நடிகர் சூர்யா. கடந்த 2013ம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 2 படத்தின் வெற்றிக்கு பிறகு, தியேட்டர்களில் வெளியான எந்த ஒரு படமும் சூர்யாவுக்கு இதுவரை வெற்றியை தரவில்லை. ஆனால் கோவித் காலத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஜெய்பீம், சூரரைப் நோற்று படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றன.
கடந்த 10 ஆண்டுகளில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான், காப்பான், பசங்க 2, எதற்கும் துணிந்தவன், 24, சிங்கம் 3, என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம், மாசு என்கிற மாசிலாமணி, கங்குவா என 10 படங்களுமே பலத்த தோல்வியை சந்தித்த படங்களாக, சூர்யாவுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டன.
தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இது ஒரு காதல் கதை படம் என்று கூறப்படுகிறது. அதனால் நிச்சயமாக சூர்யாவுக்கு இந்த படம் வெற்றியை தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படம் முடிவடையும் தருவாயை நெருங்கிய நிலையிலும் இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை.
இந்த சூழலில், சூர்யா 44 படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜா, ஒரு பெயரை செலக்ட் செய்திருக்கிறார். கல்ட் என்ற அந்த படத்தின் டைட்டிலை முடிவு செய்து அதை முறைப்படி பதிவு செய்யவும் படக்குழு முயற்சித்திருக்கிறது. அப்போது கல்ட் என்ற டைட்டிலை ஏற்கனவே நடிகர் அதர்வா பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.
நடிகர் அதர்வா, நடிகர் முரளியின் மூத்த மகன். பாணா காத்தாடி, ஈட்டி, 100, பரதேசி, கணிதன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் அவர் நடித்த நிறங்கள் மூன்று என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதர்வா ஒரு படத்தை இயக்கவும் முடிவு செய்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.
அதனால் தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு கல்ட் என அதர்வா டைட்டில் வைத்து பதிவும் செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், அந்த டைட்டிலை சூர்யா படத்துக்கு வைக்க தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் கல்ட் தலைப்புதான் என்னுடைய படத்துக்கு மிக பொருத்தமாக இருக்கும். அதை மாற்ற முடியாது. அதனால் அந்த டைட்டிலை தர முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவினர் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.





