தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று நடிகர் விஜய் சூளுரைத்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டில் துவக்கிய அவர், இந்த ஆண்டில் தனது கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
கடந்த மாதம் 26ம் தேதி, மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கேற்ற நிலையில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் பங்கேற்று பேசினார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்தான் என்றும், அவர் வெற்றி பெற்ற பிறகு இதுபோன்ற ஒரு மேடையில் முழுக்க முழுக்க தமிழில் பேசுகிறேன் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
இன்னும் ஒரு ஆண்டில் சட்டசபை தேர்தல் நெருங்குகிற நிலையில் கட்சியை பலப்படுத்தும் விதமாக கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்சியில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை இணைத்தல், கட்சி நிர்வாகிகளை நியமித்தல், பூத் கமிட்டி செயல்பாடு, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் என பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஜயின் கார் டிரைவராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் ராஜேந்திரன். பயண நேரங்களில் எப்போதுமே அவர் விஜயுடன் இருந்து வருகிறார். அதனால் பல நேரங்களில் விஜய்க்கு மிக நெருக்கமான உதவியாளரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மேடையில் அவரை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், இவர் என்னுடைய கார் டிரைவர். ஆனால் என்னுடைய நண்பர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இப்போது தவெக கட்சியில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடந்து வருகிறது. அதில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக தனது உதவியார் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனை நேற்று நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவருக்கு 27 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனது உதவியாளர் மகனை, இப்படி கட்சியின் முக்கிய பொறுப்பில் நியமித்தது தவெக கட்சி நிர்வாகிள் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தனது உதவியாளர் மகனுக்கு பதவிக்காக கட்சியில் சேர்ந்த சபரிநாதனுக்கு பதவி கொடுத்தது கட்சியினரிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தென் சென்னை மேற்கு பகுதியில் விஜய்க்காக பாடுபட்ட கட்சியினர் பலர் இருக்கையில், தனது உதவியாளர் மகனுக்கு விஜய், மாவட்ட செயலாளர் பதவி வழங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.





