நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்திருந்தார். ரூ. 325 கோடி வரை வசூலித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அமரன் படத்தைத் தொடர்ந்து இப்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி மற்றும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற 2 படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கிறார். இதில் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த் விக்ராந்த் வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் மதராஸி படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் மதராஸி படம் ரிலீஸ் ஆவதில் புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதராஸி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கை தென்னிந்திய துணைத் தூதரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் மதராஸி படத்தின் படப்பிடிப்புகள் ஒரு மாதத்துக்கு மேலாக நடத்தப்பட்டன. அங்குள்ள கொழும்பு துறை முகத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்று நடித்தார்.
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் மதராஸி படக்குழு மீது இந்த புகாரை அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மதராஸி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையில் மாதக்கணக்கில் நடந்தன. இந்த படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்த இலங்கையைச் சேர்ந்த அந்த தயாரிப்பு நிறுவனம் 5.37 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
இந்த நிறுவனம் செலவு செய்த தொகையை மதராஸி படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களுக்கு செலுத்தவில்லை என்று இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தங்களுக்கான தொகையை செலுத்தாமல் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் அந்த புகாரில் வலியுறுத்தி உள்ளது. அதனால் மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.





