இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் சுதா கொங்கரா. ஆயுத எழுத்து திரைப்படத்திலிருந்து அவருடன் சுதா ஒன்றாக பயணித்து வந்தார். இப்படியான சூழலில், துரோகி எனும் திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இதில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்குப் பிறகு, இறுதிச்சுற்று திரைப்படத்தை அவர் இயக்கினார். குத்துச்சண்டையில் மையப்படுத்தியும், காதலை இன்னொரு விதத்தில் கூறியும் தனது இயக்கத்தின் திறமையை வெளிக்காட்டினார் சுதா.
முக்கியமாக படத்தில் நடித்த ரித்திகா சிங் தனது முதல் தமிழ்த் திரைப்படம் என்ற உறுத்தல் எங்குமே இல்லாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். மாதவனுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுறையை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்தை சுதா இயக்கினார்.
சூர்யா அபர்ணா பால முரளி ஊர்வசி பூ ராமு கருணாஸ் உள்ளிட்ட நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் இடம்பெற்ற அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், தமிழகத்தை தாண்டி இந்த திரைப்படம் பலராலும் கவனிக்கப்பட்டது. நேரடியாக ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியானாலும், படம் விமர்சன ரீதியாக நல்ல ரீச் ஆனது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து இயக்கவே சுதா முடிவு செய்தார். இதற்குப் புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டது. சூர்யாவின் 2 டி என்டர்டைமென்ட் நிறுவனமே இதனை தயாரிக்க, நஸ்ரியா நஸிம், துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் சூர்யா மற்றும் சுதா இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இதன் பணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் புறநானூறு கதையை சிவகார்த்திகேயனிடம் சுதா கூறியதாகவும், இதற்கு எஸ்கேவிடம் இருந்தும் சம்மதம் கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யா கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம். அடுத்ததாக துல்கர் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற யோசனையில் சுதா இறங்கி இருப்பதாகவும், இதற்கான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.





