தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது அவரது நடிப்பில் உருவான அமரன் படம் வெளிவர இருக்கிறது. அதைத்தொடர்ந்து, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிங்க நடை படமும் அடுத்து வெளிவர இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தனது 3வது மகன் பவன் சிவகார்த்திகேயனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் சுதா கொங்கரா. சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை துவக்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உண்மை கதை என்பதால், இந்த படத்தில் நடிக்க சூர்யா விரும்பாமல் ஒதுங்கி விட்டார்.
இதையடுத்து புறநானூறு படத்தில் தனுஷை நடிக்க வைக்க இயக்குனர் சுதா கொங்கரா திட்டமிட்டார். ஆனால் குபேரா, இளையராஜா படங்கள் மற்றும் சொந்த படம் டைரக்ஷன் என தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த கமிட்மெண்டுகளில் பிஸியாக இருப்பதால், அவரால் 2 ஆண்டுகளுக்கு சுதா கொங்கராவுக்கு கால்ஷீட் தர முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் தனுஷ் நடிக்கும் திட்டத்தை கைவிட்ட சுதா கொங்கரா, இப்போது புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனை கமிட் செய்துவிட்டார். அவரும் ஓகே சொல்லிவிட்டதால், படப்பிடிப்புக்கான ப்ரீ புரடக்சன் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. விரைவில் படப்பிடிப்பு துவக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆன படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. அமரன், சிங்கநடை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் ஒரு படம், டாண் படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படம், அதே போல் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு என 3 படங்கள் உள்ளன.
இதில் தனது 25வது படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு வெங்கட்பிரபு, சிபி சக்கரவர்த்தி படங்களில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். புறநானூறு படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் மற்றும் பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அருண் விஷ்வா, உதயநிதி ஸ்டாலின் நண்பர் ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் முதல் காப்பி அடிப்படையில், தனது சொந்த நிறுவனமான மீனாட்சி சினிமாஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





