கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்ரனர். தீபாவளியை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி படமானது திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு செம பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர். கதை, திரைக்கதை, மேக்கிங், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு என அனைத்தையுமே புகழ்ந்துவருகின்றனர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்புதான். படம் ரிலீஸாகி ஐந்து நாட்கள் முடிவில் 22 கோடி ரூபாய்வரை வசூல் ஆகியிருக்கிறது. இது கார்த்தியின் ஜப்பான் பட வசூலைவிட அதிகம்.
படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட பாராட்டு அறிக்கையில், “ஜிகர்தண்டாXX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு இது. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை இந்தப் படம் நமக்கு உண்டாக்குகிறது.
எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திருவுடைய கேமரா விளையாடியிருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்ராயனின் சண்டை காட்சிகள் அபாரம்.
சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாச இசை அமைப்பதில் மன்னர் என்பதை நிரூபித்திருக்கிறார். பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டிப்போட்டு யானைகளும் நடித்திருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்” என தெரிவித்திருந்தார். அவரது இந்த பாராட்டுக்கு கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை நேரில் அழைத்தும் ரஜினிகாந்த் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்தார். அந்த சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் அனைவரும் தம்ஸ் அப் காண்பித்து புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர்.
Thanks a lot Thalaivaa for showering your Love and Praises to #JigarthandaDoubleX 🙏🏼🙏🏼🙏🏼
Your one hour long conversation with us gave me and the whole team such a Positive vibe n aura sir……
Loads of Love to you Thalaivaa from team #JigarthandaXX pic.twitter.com/xvrwSHokAu
— karthik subbaraj (@karthiksubbaraj) November 15, 2023
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தலைவா உங்கள் அன்பிலும், ஆசீர்வதிப்பிலும் எங்களை நனைய வைத்ததற்கு நன்றி .. உங்களுடன் இருந்த அந்த ஒரு மணி நேரமும் எங்கள் ஒட்டுமொத்த டீமுக்கும் பாசிட்டிவிட்டி வந்துவிட்டது.. லவ் யூ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.





