தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுகன்யா. நடிகர் கமல்ஹாசனுடன் மகாநதி இந்தியன் படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். அதே போல் நடிகர் விஜயகாந்துடன் சுகன்யா நடித்த சின்னக்கவுண்டர் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. அவர் நடித்த படங்களில் சோலையம்மா படம் பெரிய வரவேற்பை பெற்றது.
இயக்குனர் பாரதி ராஜாவின் புதுநெல்லு புது நாத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் சுகன்யா அறிமுகமானார். தொடர்ந்து கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். வால்டர் வெற்றிவேல் சின்ன மாப்ளே என பல படங்கள் அவருக்கு நல்ல பாராட்டை பெற்றுத் தந்தன.
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் தாத்தா கமலுக்கு மனைவியாக அமிர்தவல்லி என்ற கேரக்டரில் சுகன்யா நடித்திருந்தார். அந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் சுந்திர காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் கமலுடன் உருக்கமான காட்சிகளில் சுகன்யா நடித்திருந்தார்.
அந்த படத்தில் கமலுக்கு இணையாக பாட்டி கேரக்டரில் வயதான மூதாட்டியாக மேக்கப் போட்டு சுகன்யா நடித்திருந்தார். இந்தியன் தாத்தா கமலை புகழ்ந்த அளவுக்கு சுகன்யாவின் அற்புதமான நடிப்பை அந்த படத்தில் பலரும் கவனிக்க தவறி விட்டனர் என்பதே உண்மை. அந்த அளவுக்கு அவரது நடிப்பு இந்தியன் படத்தில் மிக சிறப்பாக தரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை சுகன்யா நடித்த சின்ன மாப்ளே படப்பிடிப்பு சமயத்தில் நடந்த சம்பவம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி சிவா கூறியதாவது, கோபி செட்டிபாளையத்தில் 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்தது. அங்கிருந்த ஒரு ஓட்டலில் 4 ஏசி ரூம்தான் இருந்தது. வேறொரு படம் ஷூட்டிங் நடந்ததால், எங்களுக்கு ஒதுக்கிய ரூம்களில் குளறுபடி ஏற்பட்டு, நடிகை சுகன்யா தங்குவதற்கு ரூம் இல்லை.
அங்கிருந்த மற்றொரு ஓட்டலில், முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஒரு அறைதான் அவருக்கு கிடைத்தது. ஜன்னலுக்கு கதவுகள் கூட இல்லை. அவரை அங்கு தங்க வைப்பதே எனக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனாலும் சுகன்யா அங்கேயே தங்கிக்கொள்ள சம்மதித்தார். சுகன்யா தனது அப்பா அம்மாவுடன் ஷூட்டிங்குக்கு வந்திருந்தார். அவர்களது புடவை வேட்டிகளை ஜன்னலுக்கு கட்டி தொங்க விட்டுக்கொண்டு அதே அறையில் தங்கி படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த பெருந்தன்மையை என்னால் இப்போதும் மறக்க முடியாது, என்று கூறியிருக்கிறார்.





