கடந்த 1980 – 90களில் பல படங்களில் நடித்தவர் நடிகை சுமித்ரா. கன்னிராசி படத்தில் பிரபுவுக்கு அக்காவாக ரேவதியின் அம்மாவாக நடித்திருந்தார். கடந்த பல ஆண்டுகளாக அவர் அம்மா கேரக்டர்களில் நடித்தார். குறிப்பாக வலிமை படத்தில் அஜீத்குமாரின் அம்மாவாகவும் முத்தின கத்திரிக்கா படத்தில் சுந்தர் சிக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.
மூத்த நடிகையான சுமித்ராவின் மகள் உமா 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தார். வீரநடை என்ற படத்தில் அறிமுகமான நடிகை உமா கைகலப்பு குபேரன் கடல் பூக்கள் தென்றல் கோவை பிரதர்ஸ் இலக்கணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.
அவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்ததால் சில டிவி சீரியல்களில் நடித்தார். அதன்பின்பு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியானது.
இதுகுறித்து நடிகை உமா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எனக்கு ஆரம்பகட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சி மறுப்பு நம்ப முடியாத நிலை என பல உணர்வுகள் இருந்தாலும் இதை ஜீரணிப்பதும் ஏற்றுக் கொள்வதும் எளிதானது அல்ல. ஏன் எனக்கு? ஏன் இப்போது? அடுத்து என்ன நடக்கப்போகிறது என பல கேள்விகள் என் மனதை ஆக்கிரமித்தன.
என்னுடன் இணைந்து தைரியமாக இருந்த என் கணவருக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. என் மகனுக்கு அவனது மன வலிமைக்கு நன்றி. அன்பு ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் என்னுடன் இருக்கும் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் தைரியமே என் தைரியமாகவும் மாறி உள்ளது. கண்ணீர் பிரார்த்தனைகள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் அதிர்ச்சியிலிருந்து உண்மையை ஏற்கும் நிலைக்கு மாறியதுஒரு தனிப்பயணமாகவே அமைந்தது.
மனம் தளரவோ அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளவோ நான் தயாராக இல்லை. வாழ்க்கையை அதன் யதார்த்த வடிவத்தில் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளவே முயற்சிக்கிறேன். ஒவ்வொரு நாளையும் தனித்தனியாக எதிர்கொள்ளப் போகிறேன். என்னிடம் உள்ள முழு வலிமையையும் கொண்டு இதை எதிர்த்து போராட போகிறேன். நிச்சயம் குணமடைந்து மீண்டு வருவேன் என்று உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பயணத்தில் உங்கள் ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன் என்று அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





