பொங்கல் பண்டிகைக்கு இன்னும், ஐந்து நாட்களே உள்ளன. இதனால் புத்தாடை வாங்குவது, காய்கறிகள், பொங்கலுக்கு உண்டான பொருள்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைவீதிகளில் இன்னும் கூட்டம் அதிகரிக்கவில்லை என்றாலும், வரும் நாட்களில் அதிக கூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருவதால், பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் திட்டமிட்டுள்ளனர்.
அனேகமாக வெள்ளிக்கிழமை பலரும் சென்னையில் இருந்து தங்கள் ஊருக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் புறநகர் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முக்கிய திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகின்றன.
தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் சந்திப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துள்ளது. ஏலியன் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற கான்செப்ட் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், பலரும் படத்தை எதிர்பார்த்துள்ளனர். இதுபோக, அருண் விஜயின் மிசன் சாப்டர் 1 திரைப்படமும் பன்னிரண்டாம் தேதி வெளியாகிறது.
திரையரங்குகளில் மட்டுமல்ல தொலைக்காட்சிகளிலும் பொங்கலை முன்னிட்டு புதுப்புது திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. தளபதி விஜய்க்கு கடைசியாக வெளியான லியோ திரைப்படம், வசூல் வேட்டை செய்தது. இந்தத் திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சன் டிவியில் மாலை ஒளிபரப்பப்படுகிறது. இதே போல் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும், சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பாலிவுட்டில் மிகப்பெரும் வெற்றி பெற்ற ஜவான் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. மார்க் ஆண்டனி மற்றும் வீரன் திரைப்படங்களும் அதில் ஒளிபரப்பப்படுகின்றன. விஜய் டிவியில் பரம்பொருள் மற்றும் லக்கி மேன் ஆகிய இரண்டு புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது. கலைஞர் தொலைக்காட்சியில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் திரைப்படமும், அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படமும் ஒளிபரப்பப்படுகின்றன.





