உள்ளத்தை அள்ளித் தா படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டைரக்டர் சுந்தர் சி. இந்த படத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி செந்தில், மணிவண்ணன், ஜோதி மீனா, கசன்கான், ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருப்பர். இதில் மணிவண்ணன் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 175 நாட்களுக்கு மேல் ஓடியது. இதில் எல்லா பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முறைமாமன், மேட்டுக்குடி, அருணாசலம், அன்பே சிவம், வின்னர், அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, கலகலப்பு, கலகலப்பு 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை சுந்தர் சி இயக்கினார். முன்னணி இயக்குனராக இருந்த சுந்தர் சி, நடிகை குஷ்புவை காதல் திருமணம் செய்தார்.
இயக்குனராக இருந்த சுந்தர் சி ஒரு கட்டத்தில், தலைநகரம் படம் மூலம் கதாநாயகனாகவும் மாறினார். அந்த படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சண்ட, பெருமாள், நகரம், வீராப்பு, முரட்டுக்காளை, தீ, இருட்டு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இப்போது அவரது இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி, பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அரண்மனை 4 பிரமோசன் நிகழ்ச்சியாக ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க நான் பல முயற்சிகள் செய்தேன். ஆனால் கடைசி வரை அது நிறைவேறவில்லை. உள்ளத்தை அள்ளித் தா படத்தில் முதலில் நடிகர் விஜய்தான் நடிக்க வேண்டியிருந்தது.
இதுகுறித்து நடிகர் விஜயிடம் பேசியிருந்தோம். ஆனால் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் தயாரிப்பாளர் ஜாதகம், ஜோசியம் நம்பிக்கை உள்ளவர் என்பதால், 1996ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்று உறுதியாக கூறியிருந்தார். எனவே அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்யும் விதமாக, படப்பிடிப்பை முடித்து விடலாம் என்று விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரிடம் நான் பேசிக்கொண்டு இருந்தேன்.
அப்போது, எஸ்ஏ சந்திரசேகர் விஜய் நடித்த கோயமுத்தூர் மாப்பிள்ளை படம் அதே நாளில் ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதனால் உங்கள் படத்தை 10 நாட்கள் கழித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் அதை படத்தின் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ள மறுத்து விட்டார். அதன்பிறகு அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகுதான் விஜய் நடிக்க வேண்டிய கேரக்டரில் கார்த்திக் நடித்தார் என்று கூறியிருக்கிறார் டைரக்டர் சுந்தர் சி.





