நடிகர் சூரி இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக, கவனிக்கப்படும் ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் படமும் அவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்துவிட்டது. இதைத்தொடர்ந்து அடுத்து கொட்டுக்காளி படமும் அவரது நடிப்பில் வெளிவர இருக்கிறது. தொடர்ந்து இன்னும் சில படங்களில் சூரி கமிட் ஆகி இருக்கிறார்.
காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்த சூரியை, ஹீரோவாக மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் டைரக்டர் வெற்றிமாறன். வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடித்துவிடலாம், ஆனால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க மற்ற இயக்குனர்கள் முன்வருவார்களா, என துவக்கத்தில் அச்சப்பட்ட சூரிக்கு, தைரியம் கொடுத்து நடிக்கச் சொன்னவர் நடிகர் சிவகார்த்திகேயன்தான். கொட்டுக்காளி படத்தை தயாரித்தவரும் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுந்தரபாண்டியன், கொம்பு வைச்ச சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் சசிக்குமாருடன் காமெடி கேரக்டரில் நடித்தவர்தான் சூரி. ஆனால் கருடன் படத்தில் நடிக்க இயக்குனர் துரை செந்தில்குமார் அழைத்த போது, கதையே கேட்காமல் தம்பி சூரி நடிக்கிறான், அவனுக்காக நடிக்கிறேன் என்று கருடன் படத்தில் சசிக்குமார் நடித்தார். இந்த படத்தின் சூரிக்கு சம்பளம் ரூ. 8 கோடி. சசிக்குமார் சம்பளம் ரூ. 2 கோடியாக இருந்ததும் கவனிக்கத்தக்கது.
வெற்றிமாறன் இயக்கும் படத்தில், யார் கதாநாயகனாக நடித்தாலும் வெற்றி நிச்சயம். ஏனென்றால் அவரது படங்களில் கதை, திரைக்கதை தான் பேசுமே தவிர, கதாநாயகன் யாராக இருந்தாலும் படம் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் விடுதலை படத்தின் வெற்றியை காட்டிலும், சூரி நடித்த 2வது படமான, கருடன் படத்தின் வெற்றிதான், சூரியின் ஹீரோ பயணத்தை தொடரும் நம்பிக்கையை தந்திருக்கிறது.
கருடன் படம் கடந்த மாதம் வெளியான நிலையில், மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையை புரிந்திருக்கிறது. அரண்மனை 4 படத்தை தொடர்ந்து கருடன் படமும் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. அதே போல் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வந்துள்ள மகாராஜா படமும் ரூ. 50 கோடி வசூலை நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் சூரி நடிப்பில் வெளியான கருடன் படம், வரும் ஜூலை முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. பிரைம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் வரும் தீபாவளிக்கு சூரி நடித்த விடுதலை 2 படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





