நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யா, அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பிளாப் படமாக இருந்தது.
எதற்கும் துணிந்தவன் படம் 2022ம் ஆண்டில் வெளியான நிலையில், 2 ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளிவரவில்லை. வருகிற 14ம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 2 வேடங்களில் நடித்த கங்குவா படம் ரிலீஸாவதால், ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆன படம் வணங்கான். ஆனால் ஒரு மாதம் ஷூட்டிங்கில் பங்கேற்ற சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். இதையடுத்து அந்த படத்தில், சூர்யா கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார்.
வணங்கான் படத்தை கைவிட்ட நிலையில், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆன படம் புறநானூறு. இந்த படத்தின் ஷூட்டிங்கும் சில நாட்கள் மதுரையில் நடந்தது. அதில் சூர்யாவுக்கும் இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் படத்தின் கதையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அந்த படத்தில் இருந்தும் சூர்யா வெளியேறி விட்டார். இப்போது அந்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூர்யா 44. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் இன்னும் இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டைட்டில் வைக்கவில்லை. ரசிகர்களே சூர்யா 44 என்றுதான் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா 44 படம் வருகிற மார்ச் 27ம் தேதி ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்காக சில வாரங்கள் பிரமோ நிகழ்ச்சிகளில் சூர்யா பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படப்பிடிப்பிலும் சூர்யா பங்கேற்க உள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியே வெளியாகி விட்டது. இன்னும் சூர்யா 44 என்றுதான் கூறிக்கொண்டு இருக்கிறோம் என்று சூர்யா ரசிகர்கள் பலத்த அதிருப்தியில் உள்ளனர்.





