சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஒரு வரலாற்று ஃபேன்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திசா படானி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இத்திரைப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

“கங்குவா” திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். “கங்குவா” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
சுதா கொங்கரா இதற்கு முன்பு சூர்யாவை வைத்து “சூரரைப் போற்று” என்ற மாஸ் ஹிட் திரைப்படத்தை இயக்கியவர். “சூரரை போற்று” திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கராவுடன் இணைகிறார் சூர்யா. இதனை தொடர்ந்து வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படமும் லைன் அப்பில் இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு சூர்யா பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா மகாபாரதத்தின் கர்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இத்திரைப்படம் ஹிந்தியில் உருவாகவுள்ளதாம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது வெளிவருகிறது. எனினும் இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது ஹிந்தியில் உள்ள ஒரு பெரிய இயக்குனர் கர்ணன் கதாப்பாத்திரத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க சூர்யாவை அணுகியிருக்கிறார். ஆனால் சூர்யா இதுவரை அவரிடம் எந்த பதிலையும் அளிக்கவில்லையாம். மேலும் சூர்யா பல திரைப்படங்களில் வரிசையாக ஒப்பந்தமாகியுள்ளதால் கர்ணன் கதையில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளமாட்டார் என்றும் அதில் கூறியுள்ளார்.





