சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நல்ல லாபத்தை கொடுத்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதில் அவர் தனது 46 ஆவது திரைப்படத்திற்காக வெங்கி அட்லூரியுடன் இணைந்து இருக்கிறார். ஏற்கனவே வெங்கி அட்லூரி தமிழில் தனுசை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கியிருந்தார். சொல்லப்போனால் இது நேரடி தெலுங்கு படமாக எடுக்கப்பட்டிருந்தது.
கடைசியாக இவர் துல்கர் சல்மான் உடன் இணைந்து இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படியான சூழலில் தற்போது வெங்கி அட்லூரியுடன் சூர்யா சேர்ந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் மமீதா பைஜூ கதாநாயகியாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக ராதிகா ரவீனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம். சமீபத்தில் ஹைதராபாத்தில் இந்த திரைப்படத்திற்கான பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பழனியில் சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ஆகியோர் தரிசனம் செய்தனர். தற்போது சூட்டிங் தொடங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே சூர்யாவின் 45 ஆவது திரைப்படம் குறித்த பேச்சும் அதிகரித்து வருகிறது.
ஆர் ஜே பாலாஜியுடன் அவர் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கருப்பு என பெயர் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது பேட்ச் ஒர்க் வேலைகளும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. திரிஷா முக்கியமான கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார். நட்டி, சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.
ஆன்மீகம் கலந்த பேண்டஸி திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் இதில் சூர்யா வழக்கறிஞர் மற்றும் அய்யனார் கதாபாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது. சமூக நீதி குறித்து இந்த திரைப்படம் மிகத் தீவிரமாக பேசும் என்றும், சமூக மாற்றம் குறித்த கருத்துக்களை கருப்பு திரைப்படம் கூறும் என்றும் சினிமா விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கும் நிலையில் பண்டிகை காலத்திலேயே படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.





