இயக்குனர் கௌதம் மேனன் பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். காக்க காக்க வாரணம் ஆயிரம் போன்ற சூர்யா நடித்த வெற்றிப் படங்களை இயக்கியவர் அவர்தான். அதே நேரத்தில் அவர் படங்களை தயாரிக்கவும் செய்தார். அப்படி கௌதம் மேனன் தயாரிப்பில், அவரது இயக்கத்தில் உருவான படம்தான் துருவ நட்சத்திரம்.
இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்தார். துருவ நட்சத்திரம் படம் உருவாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது. தயாரிப்பாளராக படங்களை தயாரித்து நஷ்டங்களை சந்தித்து. கடன்களில் சிக்கிய கௌதம் மேனன் இந்த படத்தை இன்னுமே ரிலீஸ் செய்ய முடியாமல் போராடி வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்குமாறு நடிகர் சூர்யாவிடம் சொன்னேன். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். என் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்த படம் தோல்வியானாலும் அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைய போவது இல்லை.
ஆனால் என் மீது நம்பிக்கை இல்லாமல் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்து விட்டார். காக்க காக்க வாரணம் ஆயிரம் என்ற அவரது வெற்றிப் படங்களை இயக்கிய என்னை நம்பாமல் அவர் நடிக்க மறுத்தது வேதனையான விஷயம் என்று அந்த நேர்காணலில் கௌதம் மேனன் கூறியிருந்தார்.
இப்போது நடிகர் சூர்யா தரப்பில் இருந்து துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்காமல் போனது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கௌதம் மேனனிடம் கதை கேட்ட சூர்யா அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு வருவதாக போன கௌதம் மேனன் பல மாதங்களாக சூர்யாவை வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார்.
அதன்பிறகு ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு வந்த அவர், அந்த படத்தை அவரே தயாரிப்பதாக சொல்லி இருக்கிறார். இந்த படத்தை நீங்கள் தயாரிக்க வேண்டாம். வேறு யாராவது தயாரித்தால் நான் நடிக்கிறேன் என்று கௌதம் மேனனிடம் சூர்யா கூறியிருக்கிறார். அதை கௌதம் மேனன் ஏற்கவில்லை. அதனால்தான் சூர்யா, துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கவில்லை. ஒரு படம் தோல்வியாகும் என தெரிந்தும் 6 மாதங்கள் அந்த படத்துக்காக வீண் உழைப்பை தர ஒரு ஹீரோ முன்வர மாட்டார் என்ற நிலையில், சூர்யா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக, தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





