நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான கங்குவா படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், இந்தியன் 2 படத்தை விட படுமோசமான படம் என்ற விமர்சனத்தில் சிக்கியுள்ளது.
கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும், இந்த படத்தை எல்லோரும் வாயை பிளந்துக்கொண்டு பார்ப்பீர்கள் என்று நடிகர் சூர்யா பிரமோ நிகழ்ச்சிகளில் உறுதியாக பேசினார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இந்த படம் ரூ. 2000 கோடி வசூலை கடந்துவிடும் என்றும் கூறியிருந்தார்.
இப்படி ஒரு காட்டு மொக்கை படத்தை எடுத்துவிட்டு நெருப்பு மாதிரி இருக்கும், வாயை பிளந்துகிட்டு பார்ப்பீங்க, 2000 கோடி ரூபாய் வசூல் என்றெல்லாம் வாய் கூசாமல் பேசினீர்களே என்றுதான் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆவேசமாக விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் இப்போது ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது கங்குவா படத்தை படத்தின் கதாநாயகன் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழு சார்ந்த முக்கியமானவர்கள் யாருமே ஒருமுறை கூட முழுமையாக பார்க்கவில்லை. படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன பிறகுதான் பார்த்துள்ளனர்.
கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, இதோ அதோ என்று இழுத்தடித்துவிட்டு கடைசியில், பிஸினஸ் கட் எனப்படும் 40 நிமிட படத்தை மட்டுமே சூர்யா, ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழு சார்ந்தவர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். படத்தில் வந்த முக்கிய காட்சிகளை கொண்ட இந்த பிஸினஸ் கட் படத்தை பார்த்துவிட்டுதான் சூர்யா, ஞானவேல் ராஜா அவ்வளவு நம்பிக்கையாக பேசி உள்ளனர்.
கங்குவா படத்தை 40 நிமிடங்கள் மட்டுமே பார்த்துவிட்டு, ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்த படம் வந்துள்ளது என்று ஓவராக பேசியதன் விளைவாக தான் இப்போது கடும் விமர்சனங்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர். இயக்குனர் சிறுத்தை சிவா மீது கொண்ட அதீத நம்பிக்கையால் அவர்கள் முழு படத்தை கங்குவா ரிலீஸான பிறகுதான் பார்த்துள்ளனர். அதன்பிறகுதான் இந்த மோசமான தகவல்களை சந்தித்து வருவதாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி, வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.





