தமிழ் சினிமாவில் பாடகராக நடிகராக வலம் வந்தவர் மலேசியா வாசுதேவன். பல வெற்றிப் படங்களில் ஹிட் பாடல்களை பாடியவர். ரஜினிக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். குறிப்பாக பொதுவாக என் மனசு தங்கம், வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னால, மாமனுக்கு மைலாப்பூருதான், வா வா வசந்தமே, சிங்கம் ஒன்று புறப்பட்டதே என பல பாடல்களை ரஜினிக்கு பாடியிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் கமல் ரஜினி ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில்தான் மலேசியா வாசுதவேன் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியிருக்கிறார். சமீபத்தில் கூட வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவனின் ஏஐ குரலில் வந்தல்லோ என்ற பாடலை அனிருத் உருவாக்கியிருந்தார். அந்த பாடலும் ஹிட் ஆனது.
பாரதிராஜா இயக்கத்தில் பெரிய வெற்றிப் படமாக இருந்தது முதல் மரியாதை. சிவாஜி கணேசன் ராதா நடித்த இந்த படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாகும். இந்த படத்தில் அந்த நிலாவ தான் கையில புடிச்சேன் பாடலை மட்டுமே சித்ரா கங்கை அமரன் பாடியிருந்தனர். மற்ற அனைத்து பாடல்களையும் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி இணைந்து பாடியிருந்தனர்.
மலேசியா வாசுதேவன் பாடகராக மட்டுமின்றி பல படங்களில் வில்லன் கேரக்டர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகன் ஒரு கைதியின் டைரி ஊர்க்காவலன் பொங்கலோ பொங்கல் பூவே உனக்காக நினைத்தேன் வந்தாய் அமைதிப்படை என பல படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை சங்கீதா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, பூவே உனக்காக படத்தில் நடித்தது எனக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது. ஏனென்றால் அந்த படத்தில் எனது சித்தப்பா மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார். அவர் என்னுடைய சித்தப்பா என்பது யாருக்குமே தெரியாது.
என்னுடைய அம்மாவின் தங்கையை அதாவது என்னுடைய சித்தியை தான் அவர் திருமணம் செய்திருக்கிறார். என்னுடைய சித்தப்பா தான் அவர். அந்த படத்தில் நடித்த போதுதான் ஒளிப்பதிவாளர் சரவணனுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு அவரும் நானும் திருமணம் செய்துக்கொண்டோம் என்று நடிகை சங்கீதா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





