சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு வெறும் நான்கே மாதங்களில் நடந்து நிறைவு பெற்றிருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு விதமான தோற்றத்தில் சூர்யா வருகிறார். ஒன்று அடர்ந்த மீசையுடன் குறுந்தாடி வைத்து ரவுடி கெட்டப்பில் இருக்கிறார். மற்றொன்று ஆயுத எழுத்து படத்தின் மைக்கேல் கதாபாத்திரத்தை போல் இளைஞர் கெட் அப்பில் சூர்யா நடித்திருக்கிறார்.
அனேகமாக இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதற்கு முன்னதாக கங்குவா திரைப்படம் வெளியாகிறது.
முதலில் இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய நாளில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் கங்குவா படக்குழு பின் வாங்கியது. தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மொத்தம் பத்து மொழிகளில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சூர்யாவின் குரலை பிற மொழிகளில் பயன்படுத்த இருக்கிறார்கள். 350 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு மட்டுமே ஓராண்டு நடைபெற்று உள்ளது. கங்குவா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், இதன் இசை வெளியீட்டு விழா வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபாஸ் என இருவரும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





