நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணைவதாக தான் அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 43 வது திரைப்படமாக உருவாகும் இதனை, அவரின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதில், துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கான டைட்டில் டீசரும் சமீபத்தில் வெளியானது. அதில் படத்திற்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மொழிப்போரை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. கடந்த அக்டோபர் மாதமே இதற்கான படப்பிடிப்பை தொடங்கி இருக்க வேண்டும்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இதன் சூட்டிங் நடத்தப்படுவதாகவும், அடுத்ததாக திருச்சி மற்றும் சிதம்பரம் பகுதியில் சூட்டிங் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது வரை அதற்கான தாமதம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அக்டோபர் மாதமே ஒவ்வொரு நடிகர் நடிகைகளிடம் கால்ஷீட் புக் செய்த நிலையில், தற்போது படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால் நடிகர்கள் வேறு படத்திற்கு சென்றிருப்பதாக தெரிகிறது.
இதனால் மீண்டும் இவர்களை ஒருங்கிணைக்க மே மாதம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்த இடைவெளியில் அயலான் திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமாரும் சூர்யாவிடம் கதையை கூறி ஓகே வாங்கி இருக்கிறாராம். அவரும் படத்திற்கான வேலைகளில் பிசியாக இறங்கி இருப்பதாக கூறுகிறார்கள். இதனால், ரவிக்குமார் படமே முதலில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் ஒரு பக்கம் சுதா கொங்கரா படம், ரவிக்குமார் திரைப்படம் என இரண்டு சமயங்களிலும் சூர்யா படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் வாடிவாசலுக்கான பணிகளிலும் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அதற்கான பணிகளும் வரும் நாட்களில் வேகம் எடுக்கும் என கூறப்படும் நிலையில் சூர்யா எந்த படத்தை முதலில் தேர்வு செய்து நடிக்க முனைப்பு காட்டுவார் கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.





