ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. தனது தம்பி ஜெயம் ரவியுடன் இணைந்து, புகழின் உச்சிக்கு சென்ற அவர், தமிழ் சினிமாவில் அறியப்படும் இயக்குனர்களின் ஒருவரானார்.
இருந்தாலும் அவர் தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தை ரீமேக் செய்து வருவதாகவும், சொந்தக் கதையை அவர் எடுப்பதில்லை என்றும் சிலர் குறை கூறி வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, ரீமேக் படத்தை எடுத்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் தந்திரம் மோகன்ராஜாவிற்கு இருப்பதாக பலரும் இயக்குனருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சூழலில், தனது தம்பியை விட்டு பிரிந்த மோகன் ராஜா விஜய்யை வைத்து வேலாயுதம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த திரைப்படமும் மற்ற திரைப்படங்களின் சாயல் ஒத்துப்போனதாக விமர்சனம் எழுந்தது. படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படி இருக்க, தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து முழுக்க முழுக்க தனது கதையை உபயோகித்து தனி ஒருவனை மோகன் ராஜா எழுதினார். ஆனால் இதில் பிரபாஸ் நடிக்க மறுத்ததால், மீண்டும் தனது தம்பி ஜெயம் ரவி உடனே மோகன் ராஜா இணைந்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் மோகன் ராஜாவின் சொந்தக் கதையில், விறுவிறுப்பாக அமைந்த இந்த திரைப்படம் அவரை கிண்டல் செய்தவர்களின் குரலை மௌனம் ஆக்கியது. படத்தில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி, காண்போரை மிரட்டினார். அவரின் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் இன்றளவும் வெள்ளி திரையில் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் எடுத்த மோகன் ராஜா, தற்போது மீண்டும் தனி ஒருவன் படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார்.
முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த வீடியோவில் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்தப் படத்தில் எதிரி உன்னை தேடி வருவான் என்று மோகன் ராஜா வீடியோவில் பேசியிருந்தார். தற்போது ஒரே கேள்வி தனி ஒருவன் படத்தில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லன் என்பது தான். இதற்கு கோலிவுட் வட்டாரத்தில் இப்போது விடை கிடைத்துள்ளது. அதாவது பகத் பாசில் மற்றும் அபிஷேக் பச்சனை வில்லன் கதாபாத்திரத்தில் வைக்க மோகன் ராஜா பேசி வருகிறாராம். இருவரில் யார் கிடைத்தாலும் ஓகே என்ற நிலை இருக்கும் நிலையில், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





