தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. 7ஜி ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா நடிப்பில் உருவான கேடி திரைப்படத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தமன்னா பிஸியாக நடித்து வருகிறார். விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அவர் உருவாக்கினார்.

தற்போது திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திலும் தமன்னா நடித்துள்ளார். காவாலயா பாடலில் அவரது எடுப்பான நடன அசைவுகளால், சொக்கிப் போன ரசிகர்கள் பாடலை ஹிட் செய்தனர். காவாலயா என்னும் ஒரு பாடலின் மூலமே, மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதே போல், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் போலோ சங்கர் படத்திலும் தமன்னா நடித்திருக்கிறார். அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோல் ஜெயிலர் திரைப்படமும் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்த தனது இரண்டு படங்கள் வெளியாவதால், படுகுஷியில் இருக்கிறார் தமன்னா.

இந்த நிலையில் சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா கலந்து கொண்டார். புடவையுடன் ஜோராக வந்திருந்த தமன்னாவை காண, அங்கு மிகப்பெரிய இளைஞர் பட்டாளமே திரண்டது. அப்போது மேடையை விட்டு இறங்கிய தமன்னா, ரசிகரை நோக்கி கையசைத்தவாறே அங்கிருந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கூட்டத்திலிருந்து வெளியேறிய இளைஞர் ஒருவர், தமன்னாவின் கையைப் பிடித்து இழுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக, இளைஞரை பிடித்து வெளியே தள்ள முயன்றனர். அப்போது, அந்த நபர் ஒரே ஒரு செல்பி மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று கெஞ்சினார். இருப்பினும் பாதுகாவலர்கள் அவரை வெளியே தள்ளினர்.
ஆனால் இதை விரும்பாத தமன்னா, இளைஞரை அருகில் வருமாறு கூறினார். தொடர்ந்து பொறுமையாக நின்று, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். தமன்னாவின் இந்த செயலைப் பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்கள், விண்ணை பிளக்கும் சத்தத்தில் கோஷமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், தமன்னாவைப் போல் ஒரு நல்ல நடிகை இருக்க முடியாது என்றும், அவர் ஒரு தங்கம் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.





