தமிழில் உருவாகும் படங்கள் ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற பிற மாநிலங்களில் படமாக்கப்படுவது போல மலையாள படங்கள் சில நேரங்களில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் படமாக்கப்படுகின்றன. அதிலும் காரைக்குடி சிவகாசி கன்யாகுமரி தென்காசி திருச்செந்தூர் பழனி போன்ற நகரங்களில் மலையாள படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.
சமீபத்தில் காரைக்குடியில் மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மம்முட்டி பங்கேற்ற ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து அதிகாலை தனது காரில் மதுரை செல்வதற்கு நடிகர் மம்முட்டி காரில் சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப் சரியான வழி காட்டாததால் அவரது கார் டிரைவர் தடுமாற்றம் அடைந்துள்ளார்.
அங்கிருந்த ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவர் வழி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சொன்ன வழி புரியாமல் டிரைவரும் காரில் இருந்த மம்முட்டியின் உதவியாளர்களும் குழப்பம் அடைந்தனர். அப்போது இதை கவனித்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர், அங்கு படுத்திருந்தவர் எழுந்து வந்து நான் உங்களுக்கு வழிகாட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
என்னிடம் பைக் உள்ளது. நான் பைக்கில் முன்னால் செல்கிறேன். நீங்கள் எனக்கு பின்னால் வாருங்கள் என்று சொல்லி வழிகாட்டுவதாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு காருக்கு முன்னால் சென்று வழிகாட்டி உள்ளார். அப்போது காருக்குள் இருந்து இறங்கி வந்த நடிகர் மம்முட்டி, அந்த நபரின் போனை வாங்கி அவருடன் நின்று போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
அதில் நம்ம பிரண்டு என்றும் அந்த நபரை நடிகர் மம்முட்டி மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னை தனது நண்பர் என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அவர் நான் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
சின்ன நடிகர்கள் கூட இந்த காலத்தில் தனது ரசிகர்களை கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒரு நெருக்கடியான சூழலில் தனக்கு உதவிய ஒரு சாதாரண மனிதருடன் இயல்பாக பேசி பழகி போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமின்றி அவரை தனது நண்பர் என்று நடிகர் மம்முட்டி கூறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. இவரை போல தமிழ் நடிகர்கள் யாரும் யதார்த்தமாக இல்லையே என்றும் கூறுகின்றனர்.





