நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசனும் கடந்த 1970களின் இறுதி வரை பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் நினைத்தாலே இனிக்கும் படம் 1979ம் ஆண்டில் வெளியான பிறகு இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முக்கிய முடிவுக்கு வந்தனர். ஏனெனில் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தனித்தனி பாதையில் பயணிப்பதே சிறந்தது என்று கருதினர்.
அதுதான் பின்னாளில் அவர்களது இமாலய வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது. ரஜினி ஒருபுறம் கமல் மறுபுறம் என வெற்றிப்படங்களை கொடுத்து சிகரம் தொட்டனர். இப்போது ரஜினியும் கமலும் 70 வயதுகளை கடந்த நிலையில் 150 கோடி ரூபாய்களுக்கு மேல் சம்பளம் வாங்கும் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.
ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் பிரமோ வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
வருகிற நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்த நாளில் அல்லது வருகிற டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். 2027ம் ஆண்டில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இதில் நடிகர் மம்முட்டியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது ரஜினி கமல் மம்முட்டி நடிப்பில் ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலை எட்டவில்லை. ஆனால் இந்தி தெலுங்கு கன்னடம் என பிறமொழி படங்களில் பல படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை மிக சாதாரணமாக கடந்து விடுகின்றன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு குறையாகவும் ஏமாற்றமாகவும் இருந்து வருகிறது.
அதனால் 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் ஒரு அற்புத வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது. மேலும் இதை சிறப்பாக அவர் பயன்படுத்தி இந்த படத்தை வேற லெவலில் கொடுத்தால் கண்டிப்பாக ரூ. 1000 கோடி வசூல் என்ற இலக்கை எட்டிவிடலாம். அவருக்கும் மிகப்பெரிய புகழ் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





