இளையராஜாவின் மகள் பவதாரணி, நேற்று மாலை இலங்கையில் உள்ள சித்த மருத்துத்துறை மருத்துவமனையில் உயிரிழந்தார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்தார். உலக அளவில் சிகிச்சையில் சிறந்ததாக கூறப்படும் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் பவதாரணி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது.
இளையராஜா மகள் பவதாரணியின் திடீர் மறைவு தமிழ் சினிமாத் துறையினரை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதே பலருக்கும் தெரியாது. இந்த விஷயத்தை பவதாரணிக்கு தெரியாமல் இளையராஜா, கங்கை அமரன் குடும்பத்தினர் மறைத்து வைத்து, அவருக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்குறே, மயில்போல பொண்ணு ஒண்ணு, இது சங்கீத திருநாளோ, நீ இல்லை என்றால், ஔியிலே தெரிவதென்ன தேவதையா, மஸ்தானா மஸ்தானா நீதான் எனக்கு மஸ்தானா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இதில் பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு தேசிய விருது பெற்றவர் பவதாரணி.
ஆனால் தனித்துவமான குரல் வளம் இருந்தும் பவதாரணியால் சின்னக்குயில் சித்ரா, எஸ். ஜானகி, பி.சுசீலா, ஸ்வர்ணலதா போல மிகப்பெரிய இடத்துக்கு வர முடியவில்லை. அதுவும் தமிழ் சினிமாவில் இசைத்துறையில், இசைஞானியாக இருந்த இளையராஜா மகளாக இருந்தும் அவரால் உயர்ந்த இடத்தை தொட முடியவில்லை.
இதற்கு தடையாக இருந்த முக்கியமான விஷயங்கள், பிற இசையமைப்பாளர்கள் பவதாரணி, இளையராஜா மகள். நமது இசையில் பாட வருவாரா, என்று கருதியுள்ளனர். இன்னும் சிலர், இளையராஜா மகள் என்பதால் அவரை அணுகுவது சிரமம் என்றும் விலகிப் போயுள்ளனர்.இதனால் பிற இசையமைப்பாளர்களின் படங்களில் அவரால் நிறைய பாடல்களை பாட முடியவில்லை.
மேலும் பவதாரணிக்கு ‘பிளைட்போபியா’ என்ற நோய் இருந்துள்ளது. அதாவது விமானத்தில் செல்வது அவருக்கு மிகுந்த அலர்ஜியாக இருந்துள்ளது. அதனால் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா வெளிநாடுகளில் நடத்திய கச்சேரிகளில் அவரால் விமானத்தில் சென்று பங்கேற்க முடியவில்லை. உலகளாவிய புகழ் அவருக்கு கிடைக்காமலேயே போய்விட்டது.





