ஒரு மனிதனுக்கு பெயர் எப்படி மிக முக்கியமான அடையாளமாக அவனது பெயர் இருக்கிறதோ அதுபோல் ஒரு படத்துக்கு முதலில் அடையாளம் தருவது அந்த படத்தின் டைட்டில்தான். அந்த காலத்தில் படத்தின் டைட்டிலே படம் குறித்த ஒரு ஆர்வத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு தூண்டி விட்டது.
அதே நேரத்தில் அந்த படத்தின் டைட்டில், அந்த படத்தின் கதைக்கு ஒரு குறியீடாகவும் இருக்கும். உதாரணமாக பாசமலர் என்றால் அண்ணன் தங்கை பாசம், எதிர்நீச்சல் என்றால் போராடி வெற்றி பெற்ற ஒரு ஏழை மாணவனின் கதை, படகோட்டி என்றால் மீனவனின் வாழ்க்கை, அன்பே வா என்றால் காதலை மையப்படுத்திய கதையாக இருக்கும்.
அதே போல் காக்கிச் சட்டை, மலபார் போலீஸ் என்றால் போலீஸை மையப்படுத்திய கதை நான் சிவப்பு மனிதன் என்றால் கெட்டவர்களை அழிக்கும் கதாநாயகனின் கதை என ஒவ்வொரு படமும் அதன் டைட்டிலில் கதையை குறியீடாக கொண்டிருந்தது. அதே நேரத்தில் அந்த டைட்டிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் கதைக்குதான் பஞ்சம் என்றால் டைட்டிலுக்கும் அதை விட கடுமையான பஞ்சம் நீடிக்கிறது. இதனால் கதைகளை பிற மொழி படங்களில் இருந்து சுடுவது போல் டைட்டில்களையும் இயக்குனர்கள் சுடுகின்றனர். அதில் நடிகர் சிவகார்த்திகேயன்தான் முதலிடத்தில் நிற்கிறார்.
அவர் நடித்த படங்களில் இதுவரை எதிர்நீச்சல் காக்கி சட்டை வேலைக்காரன் அமரன் மாவீரன் இப்போது நடித்துவரும் பராசக்தி என்ற பழைய படங்களின் டைட்டில்கள்தான். அதே போல் நான் அவன் இல்லை தீ பொல்லாதவன் மாப்பிள்ளை நான் சிவப்பு மனிதன் பில்லா நானே வருவேன் நீயா காதலிக்க நேரமில்லை இது நம்ம ஆளு உத்தம புத்திரன் அரிச்சந்திரா என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.
இப்படி பழைய டைட்டில்களை திருடும் இயக்குனர்கள் மத்தியில் பல இயக்குனர்கள் மிக சுலபமாக ஹீரோ கேரக்டர் பெயரை படத்தின் டைட்டிலாக வைத்துவிடுகின்றனர். அண்ணாமலை பாபா பாட்ஷா காலா கபாலி லியோ விக்ரம் தேவா முத்து வீரா என வைக்கின்றனர். குறிப்பாக ரஜினி படங்களுக்கு அதிகமாக இதுதான் நடக்கிறது. நினைவே ஒரு சங்கீதம் கடலோர கவிதைகள் அலைகள் ஓய்வதில்லை மெல்ல திறந்தது கதவு அம்மன் கோவில் கிழக்காலே என கேட்டவுடன் மனதை இதமாக்கும் டைட்டில்களை தர அப்படி யோசிக்க எந்த இயக்குனருக்குமே நேரம் இல்லையா, என்று ரசிகர்கள் புலம்பும் நிலை வந்துவிட்டது.





