- Advertisement -
Homeபொழுதுபோக்குகற்பனையா கதை பண்றது, யோசிக்கறது எல்லாம் இனி வாய்ப்பில்ல ராஜா… - வேற டிரண்டுக்கு மாறிய...

கற்பனையா கதை பண்றது, யோசிக்கறது எல்லாம் இனி வாய்ப்பில்ல ராஜா… – வேற டிரண்டுக்கு மாறிய தமிழ் சினிமா!

- Advertisement -

ஒரு திரைப்படம் என்பது கற்பனையில் உருவாவதுதான். வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி அதை ஒரு கதையாக மாற்றி சினிமா உருவாகிறது. இதில் குடும்பம் அரசியல் சமுதாயம் என கதைகளின் கருக்கள் மாறுபட்டாலும் ரசிகர்கள் விரும்பும் கதைகள்தான் படங்களாக வெற்றி பெறுகின்றன.

கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலங்களில் குடும்ப கதைகளே அதிகம் வெற்றி பெற்றன. படத்தின் இறுதியில் வில்லன் திருந்துவதும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதும் காதலர்கள், கணவன் மனைவி ஒன்று சேர்வதுமே படத்தின் அந்த கதையின் வெற்றியாக இருந்தது. அதுவே படம் பார்த்த ரசிகர்களுக்கும் திருப்தியை நிம்மதியை தந்தது. இது எம்ஜிஆர் சிவாஜி நடித்த காலமாக இருந்தது.

அதன்பிறகு வில்லன்களை பழிவாங்கும் ஹீரோக்களின் கதைகளில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்றவர்கள் நடித்தனர். ஊர் மக்களை ஏமாற்றும் வில்லன்களை குறிப்பாக ஜமீன்தார்களை ரஜினி கமல் கேள்வி கேட்டனர். பெற்றோரை கொலை செய்த, சகோதரியை கெடுத்த வில்லன்களை, படத்தின் இறுதி வரை போராடி ஹீரோக்கள் பழிவாங்கினர். கிளைமாக்ஸில் கண்டிப்பாக போலீஸ் வரும்.

அதன்பிறகு காதல் படங்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தது. பார்க்காமல் காதல் பேசாமல் காதல் மொபைல் போன் காதல் என காதல் படங்களாக குவிந்த படங்களில் அஜீத் விஜய் சூர்யா தனுஷ் விக்ரம் போன்றவர்கள் நடித்தனர். இப்போது ஆக்சன் ரத்தம் துப்பாக்கி வன்முறை என நெல்சன் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் தமிழ் சினிமாவை ரத்த களறியாக மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். இதில் சாதி உரிமை பேசும் படங்களும் நசுக்கிட்டாங்க பிதுக்கிட்டாங்க என்று காமெடி படங்களையும் வரச் செய்கின்றனர்.

இதற்கிடையே தற்போது பிற மொழி படங்களில் இருந்து கதைகளை, காட்சிகளை திருடுதல், காப்பியடித்தல் தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டது. ஹாலிவுட் படங்களில் இருந்தும் கதைகளை சுடுகின்றனர். படத்தின் டைட்டிலை கூட யோசிக்க நேரமின்றி பழைய படங்களின் டைட்டில்களை சண்டை போட்டு போராடி வாங்கி வைத்துக் கொள்கின்றனர். சொந்தமாக டைட்டில் கூட யோசிக்க இயக்குனர், உதவி இயக்குனர்களுக்கு நேரமில்லை.

இப்போது அடுத்த நிலையில் எப்போதோ நடந்த சம்பவங்களை, யாராவது ஒருவர் வாழ்க்கை கதையை படமாக்குவதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜிடி நாயுடு மொழிப்போர் தியாகி இராசேந்திரன் இளையராஜா என அவர்களது வாழ்க்கை கதைகளை, உண்மை சம்பவங்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சொந்த சரக்கே இல்லாமல் இப்படியே இரவல் கதைகளை வாங்கி படம் எடுத்துக்கொண்டே போனால், தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்னாகும் என்பதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பயங்கரமான கேள்வியாக இருக்கிறது.

சற்று முன்