நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகிய நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். வருகிற 2026ம் ஆண்டில் தமிழக முதல்வர் விஜய்தான் என்ற கோஷங்களும் ஒலித்து வருகின்றன.
நடிகர் விஜய், அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கினார். ஆனால் அதற்கு முன்பே 2023ம் ஆண்டில் இருந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு வழங்கி, கல்வி விருது சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகிறார்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை அவரது பெற்றோருடன் சென்னைக்கு வரவழைத்து பெரிய மண்டபத்தில் விழா நடத்தி அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி, விழா மேடையில் பொன்னாடை அணிவித்து தனது கரங்களால் ரொக்கப் பரிசு சான்றிதழ் வழங்குவது விஜயை வழக்கமாக 3 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
நடிகர் விஜய் மீது அதிக அன்பு கொண்ட ரசிகர்களாக உள்ள மாணவ மாணவியர் மேடையில் அவருடன் செல்பி எடுக்கின்றனர். சில நேரங்களில் கட்டிப்பிடித்து முத்தம் தருகின்றனர். கைகளை பிடித்து தங்களது தோள் மீது போட்டுக்கொண்டு போட்டோவுக்கு மாணவியர் போஸ் தருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை செய்திருந்தார்.
பல ஆயிரம் பேர் முன்னிலையில், ஒரு நடிகனுக்கு தங்களது மகள் முத்தம் கொடுப்பதை அந்த நடிகனை கட்டிப் பிடிப்பதை எப்படி பெற்றோர் ஏற்றுக்கொள்கின்றனர் என்று தாறுமாறாக பேசியிருந்தார். அவரது இந்த மலிவான பேச்சுக்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி தந்து பேசியிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தம்பி விஜயின் கருத்துகளிலும் கொள்கைகளிலும் மாற்றுக் கருத்து உள்ளவள் நான். அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து விருது அளிப்பதையும் குழந்தைகள் அண்ணா என்று அவரை அழைப்பதையும் கொச்சைப்படுத்தி பேசிய சகோதரர் வேல்முருகனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். விஜயை அவர் பாராட்டவில்லை என்றால் கூட கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பெண் குழந்தைகள் எங்கெல்லாம் கொச்சைப்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் என்னுடைய குரல் ஓங்கி உடைக்கும். அது கொள்கை, கட்சி சார்ந்தது அல்ல. அது என் உணர்வு சார்ந்தது என்று தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியிருக்கிறார்.





