தமிழ் திரை உலகத்தை போலவே இங்கு தெலுங்கு திரை உலகிலும் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் கோலிவுட்டை விட டோலிவுட்டில் கொண்டாட்டம் அதிகம் என்றே கூறலாம். சிரஞ்சீவியை தொடங்கி நாகர்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என மூத்த நடிகர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதேபோல் அங்கு குறுகிய காலத்தில் வளர்ந்த மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ராம்சரண், விஜய தேவரகொண்டா என நீளும் இந்த பட்டியலில் மிக முக்கியமானவர் நானி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர் நன்கு பரீட்சையமானவர்தான்.
வெப்பம் திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதேசமயம் தெலுங்கு திரையுலகம் நானியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களை கொடுத்து அங்கு, வேகமாக அவர் வளர்ந்து வந்தார்.
இப்படியான சூழலில் நான் ஈ திரைப்படமும் நானிக்கு வரவேற்பை கொடுத்தது. அதில் அவர் குறுகிய நேரமே வந்து போனாலும், அது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஹிட் 3 படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதனை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு தமிழ் என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இப்படியான சூழலில், சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், தமிழ் சினிமாவில் என்னால் கடந்த பத்து ஆண்டுகளில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது மெய்யழகன் மட்டும் தான்.
இங்கு நீங்கள் ஒரு படத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் போடலாம். ஆனால் மெய்யழகனில் அது எதுவும் இல்லாமல் ஒரு மேஜிக் இருக்கும். எப்போது எல்லாம் மெய்யழகன் திரைப்படத்தை நினைக்கிறேனோ அப்போது மகிழ்ச்சி அடைகிறேன். ரெட்ரோவும் ஹிட் 3யும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் இதனை நான் போட்டியாக கருதவில்லை. நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்கள் ரெட்ரோ திரைப்படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த வார இறுதியில் இரண்டு திரைப்படங்களும் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.





