வாரந்தோறும் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் ரிலீஸாவது தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்து வருகின்றன. சில வாரங்களில் 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாவதும் சில வாரங்களில் ஒன்றிரண்டு படங்களும் ரிலீஸாவதும் வழக்கமான ஒன்றுதான். எனினும் கடந்த 3 வாரங்களாக டிராகன் படத்துக்கு பிறகு வெளியான எந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.
டிராகன் படம் வெளியான 3 நாட்களில் ரூ. 50 கோடியும், 9 நாட்களில் ரூ. 100 கோடியும் வசூலித்து பெரிய அளவில் சாதனை படைத்தது. இப்போது இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 150 கோடியை நெருங்கி விட்ட நிலையில், அடுத்தடுத்து வரும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இப்போதைக்கு ரஜினி கமல் விஜய் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸாகாத நிலையில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதே வேளையில் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. வருகிற 27ம் தேதி விக்ரம் நடித்த வீர தீர சூரன் படமும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நாளை வெளியாகும் 10 படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 2 படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற ரி ரிலீஸ் படங்களாக உள்ளன. அவை நடிகர் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படமும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படமும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரியோ ராஜ் நடித்துள்ள ஸ்வீட் ஹார்ட் படம் நாளை வெளியாகிறது. கோபிகா ரமேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தயாரித்திருக்கிறார். வினீத் எஸ் சுகுமார் என்ற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கி உள்ளார். அதே போல் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பெருசு என்ற படம் நாளை ரிலீஸாகிறது. இதில் வைபவ் அவரது அண்ணன் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
அதே போல் ராபர், வருணன், மாடன் கொடை விழா, குற்றம் குறை, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், டெக்ஸர் ஆகிய படங்களும் நாளை ரிலீஸ் ஆகின்றன. இதில் புதிய படங்கள் 8ம் ரி ரிலீஸ் படங்கள் 2ம் என மொத்தம் 10 படங்கள் நாளை தியேட்டர்களுக்கு வருகின்றன. இதில் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.





