இந்த ஆண்டில் நடிகர் விஜய்க்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் திருநாளை முன்னிட்டு அவரது வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் பெரிய சாதனை எதையும் காட்டவில்லை. இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்தார் விஜய்.
இந்தத் திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இது எதுவும் படத்தை பாதிக்காத அளவுக்கு, சக்கை போடு போட்டது திரைப்படம். கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த திரைப்படத்தின் வெற்றி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார் தளபதி விஜய். இதில், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், இவானா, பிரேம்ஜி அமரன், வைபவ், யுகேந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. டெல்லியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் நடைபெற்றது.
தாய்லாந்து நாட்டில் முக்கியமான கார் சண்டை காட்சி படமாக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் அறிவித்தது. தற்போது ஹைதராபாத்தில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் டைம் ட்ராவல் கான்செப்ட் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மாநாடு திரைப்படத்தில் டைம் லூப் கான்செப்ட்டை சரியாக சொல்லி இருப்பார் வெங்கட் பிரபு.
இந்த நிலையில் தான் அவர் இந்த படத்தில் டைம் டிராவல் கதையை கையில் எடுத்திருக்கிறாராம். இதில் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்காலத்தில் இருக்கும் அனுபவம் வாய்ந்த விஜய், தற்காலத்திற்கும் இன்னொரு விஜய்யை சந்திப்பது தான் படத்தின் ஒன் லைன் எனக்கு கூறப்படுகிறது. இதன் பஸ்ட் லுக் போஸ்டர், புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையையும் விஜய் ஓகே செய்து இருக்கிறாராம். சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தான் இதன் இயக்குனர் என்று கூறப்படுகிறது. அவரது கதையை தான் விஜய் ஓகே செய்திருக்கிறாராம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





